Saturday, November 5, 2011

நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்



நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்-நீ
   நீடூழி வாழ்வாயே இன்றும்என்றும்
 பஞ்சிலே பக்கத்தில் நெருப்புவைக்க-பலர்
   பதறிட துடித்திட முள்ளாய்த்தைக்க
 வஞ்சினம் ஒன்றுமே செயலாயாக-எதிர்
   வரலாறு அதையெடுத்து சொல்லிப்போக
 அஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல
   அரியபுகழ் பொற்றாயே நீதிமன்றம்

 எவரென்ன செய்தாலும் தடுக்கயியலா-என
   எண்ணியே எண்ணியதை செய்யமுயல
 தவரன்ன எனச்சொல்லி தடையும்போட்டே-நல்
   தரமிக்க கேள்விகளை தெளிவாய்கேட்டே
 சுவரன்ன முட்டினால் உடையும்தலையே-யாம்
   சொல்வதை கேட்பவர் யாருமிலையே
 இவரென்ன சொல்வதா கேட்கயிலா-இனி
   ஈகோவை நனிமேலும் காட்டயியலா
             
 முதலையோ கொண்டது  விடுவதில்லை-நம்
   முதல்வரோ பிடிவாதம் விடுபவரில்லை
 மதலையர் காத்திட வேறுயிடத்தில்-உயர்
   மருத்துவ மனைதன்னை நல்லதரத்தில்
 வான்முட்ட கட்டினால் வாழ்த்துவாரே-வரும்
   வரலாற்றில் அவர்புகழ் போற்றுவாரே
 தானத்தில் சிறந்ததாய் சாற்றுவாரே-நி
   தானமாம் அதையெண்ணி ஆற்றுவீரே!

 முடிவாக  முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
   முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
 விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
   வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்
 கடிவாளம் இல்லாத குதிரைபோல-நீர்
   கண்டபடி ஓடாமல் ஆய்ந்துசால
 இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்-நிலை
   எண்ணியே செயல்பட என்றுமேவாழ்க!
    
                    புலவர் சா இராமாநுசம்
            
            
            
             
            

Thursday, November 3, 2011

வேண்டாம் அம்மா வேண்டாமே


ஆளும் அம்மா எண்ணுங்கள்-எதையும்
ஆய்ந்து பிறகே பண்ணுங்கள்
நாளும் செய்யும் மாற்றங்கள்-மிக
நன்றா என்பதை சாற்றுங்கள்
பாளு(ழு)ம் நூலகம் செய்திட்ட பெரும்
பாபம் என்ன தூக்கிட்டீர்
தேளும் கொட்டிய நிலைபெற்றோம்
தீயில் விழுந்த நிலையுற்றோம்

வேண்டாம் அம்மா வேண்டாமே-மேலும்
வேதனை தன்னைத் தூண்டாமே
ஆண்டான் செய்தார் என்பதற்கா-அதை
அகற்றுதல் மக்கள் நன்மைக்கா
தூண்டா விளக்காம் நூலகமே-அதை
தூக்கி எறிதல் பாதகமே
ஈண்டார் என்னை எதிர்ப்பதென-வரும்
ஈகோ விடுவீர் வேண்டுகிறோம்

அதற்கென கட்டிய கட்டிடமே-அறிஞர்
அண்ணா பெயரில்! விட்டிடமே
எதற்கென மாற்றுமிவ் முடிவாகும்-இதனால்
என்ன நன்மை விடிவாகும்
இதற்கென எட்டு மாடிகளே-திட்டம்
இட்டே செய்தது பலகோடிகளே
குதர்கமே வேண்டாம் இச்செயலில்-புத்தக
குழந்தைகள் அழியுமிவ் புண்செயலில்

ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
உரிய வசதிகள் கிட்டியதே
ஒன்றை மாற்றி  ஒன்றாக்கின்-அவை
அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்
நன்றா இச்செயல் ஆயுங்கள்-உடன்
நலமுற ஆணையை மாற்றுங்கள்
கன்றாம் மக்களின் தாயாக-உமைக்
கருதிட ஆவன செய்யுங்கள்

மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
மற்றோர் இடத்தில் கட்டுங்கள்
பொருத்தமே அனைத்தும் உரியதென-உலகு
போற்றிப் புகழ அரியதென
வருத்தமே யாரும் படமாட்டார்-உமை
வாழ்த்தியே துன்பப் படமாட்டார்
திருத்தமே செய்வீர் உடனடியே-முடிவை
திரும்பப் பெறுவீர் அப்படியே

குறிப்பு- மருத்தவர் ஆலோசனை, ஓய்வெடுக்க சொன்ன உங்கள் அன்பு
ஆணை இரண்டையும் மீறி இக் கவிதையை எழுத காரணம் வன் 
செயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்! மன்னிக்க.

Tuesday, November 1, 2011

பட்டினியால் வாடுவது வன்னிமண்


அன்பு நெஞ்சங்களே! வணக்கம்!
என் வலையில் நான் இறுதியாக எழுதி வெளியிட்ட  இடுவீர் பிச்சை இடுவீரே என்ற கவிதைக்கு பிறகு உடன் மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டு இன்றுதான் வீடு திரும்பினேன் எனவே அக் கவிதைக்கு
மறுமொழி எழுதிய அனைவருக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
     இனி ஒரு வார காலத்திற்கு உங்களுக்கு  நன்றி தெரிவிக்கவோ
மறுமொழி இடவோ இயலாத உடல் நிலை! மன்னிக்க!
புலவர் சா இராமாநுசம்


பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே

ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்