நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்-நீ
நீடூழி வாழ்வாயே இன்றும்என்றும்
பஞ்சிலே பக்கத்தில் நெருப்புவைக்க-பலர்
பதறிட துடித்திட முள்ளாய்த்தைக்க
வஞ்சினம் ஒன்றுமே செயலாயாக-எதிர்
வரலாறு அதையெடுத்து சொல்லிப்போக
அஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல
அரியபுகழ் பொற்றாயே நீதிமன்றம்
எவரென்ன செய்தாலும் தடுக்கயியலா-என
எண்ணியே எண்ணியதை செய்யமுயல
தவரன்ன எனச்சொல்லி தடையும்போட்டே-நல்
தரமிக்க கேள்விகளை தெளிவாய்கேட்டே
சுவரன்ன முட்டினால் உடையும்தலையே-யாம்
சொல்வதை கேட்பவர் யாருமிலையே
இவரென்ன சொல்வதா கேட்கயிலா-இனி
ஈகோவை நனிமேலும் காட்டயியலா
முதலையோ கொண்டது விடுவதில்லை-நம்
முதல்வரோ பிடிவாதம் விடுபவரில்லை
மதலையர் காத்திட வேறுயிடத்தில்-உயர்
மருத்துவ மனைதன்னை நல்லதரத்தில்
வான்முட்ட கட்டினால் வாழ்த்துவாரே-வரும்
வரலாற்றில் அவர்புகழ் போற்றுவாரே
தானத்தில் சிறந்ததாய் சாற்றுவாரே-நி
தானமாம் அதையெண்ணி ஆற்றுவீரே!
முடிவாக முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்
கடிவாளம் இல்லாத குதிரைபோல-நீர்
கண்டபடி ஓடாமல் ஆய்ந்துசால
இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்-நிலை
எண்ணியே செயல்பட என்றுமேவாழ்க!
புலவர் சா இராமாநுசம்