Friday, October 21, 2011

வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

  
தேசியம் என்றாலே பொருளறிய தாரே
  தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
  தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
  கொட்டவும்  குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
  பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
  எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
  உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
  சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
  வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
  காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
  ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
  துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
  மேதினி முற்றுமே நம்புகழ் பாட
       
               புலவர் சாஇராமாநுசம்

 

Wednesday, October 19, 2011

இன்றென் பிறந்த நாளாகும்

 
 எட்டுப் பத்தென  வயதாகும்-ஐயா
   இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பம்
   பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
   துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
   விலகா வேதனை அன்றோதான்

வையம்  தன்னில் வாழ்வாங்கு-நான்
   வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
   புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
   அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
   சிறப்பென அன்பைப் பெய்தேனே

சிதலைத் தின்ற ஆல்போல-அடி
   சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
   மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
   இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
   படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்

வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
   வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
   ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
   நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
   விளைந்தது! நன்றி! சொந்தங்களே

                         புலவர் சா இராமாநுசம்

Monday, October 17, 2011

உலக மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்