Saturday, October 8, 2011

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்

   
         புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
        பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
        கவிதை- எண் 2  புலவர் சா இராமாநுசம்
     
       தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்
     
      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்
     
      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்
          
              புலவர் சா இராமாநுசம்

Friday, October 7, 2011

வேங்கட உன்னடி தொழுகின்றேன்

    குறிப்பு- புரட்டாசி மூன்றாம் சன‍க்கிழமை
                      பாமாலை!

    ஆதவன் எழவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம்
      ஆடிப் பாடி வருகின்றார்
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
     வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்
     

Thursday, October 6, 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே



     புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
        போக்கில் வேண்டும் மாற்றங்களே
     நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
        நீங்கிட வேண்டும் வேற்றுமையே
     வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
        வடித்திட காரணம் பொறுத்திடுக
     நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
        நிச்சியம் ஈழம் பெறுவீரே

     இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
        எதையும் பெரிது பண்ணாதீர்
     புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
        போரினை தொடங்குவீர் நீரின்றே
     அதுவரை  நடக்கும பேயாட்டம்-சிங்கள
        ஆணவ நாய்களின் வாலாட்டம்
     எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
         எதிர் வரும் காலம் காண்பிக்கும்

      வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
         வாழ்வில் வீசிய புய லாலே
      தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
         தங்கிப் பலரே அங்கங் கும்
      பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
         பட்டம் பதவி சூழ் கின்றீர
      நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
         நினைவால் வாரா துயர் மூளும்

      பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
         பிரிந்த உறவை  மறப் பீரா
      திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
         தேம்பும் மக்களை மறப்பீரா
      இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
          ஈழம் காண முனைந் திடுவீர்
      சிறந்த முடிவை எடுப் பீரே-என
          செப்பினேன் வேண்டி முடிப் பீரே
                            புலவர் சா இராமாநுசம்

      

Wednesday, October 5, 2011

தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே

  

   காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
     கவிப்பெண்ணே கண்டவுடன் பயந்துச் சென்றாய்
   மாதரசி மனவானில் தேடுயொன்றா-நீ
     மறைந்தாயா அறியேனே இதும்நன்றா
  பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
     பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
   ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
      அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்
  
   கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
      கவிபாடி என்வலையில்  தரவும்நன்றே
   உற்றதுணை நீதானே மறந்தாபோனாய்-நெஞ்சம்
      உற்றதுயர் அறிந்துமா பறந்தேபோனாய்
   குற்றமென்ன கண்டாயா கூறுப்பெண்ணே-என்
      குறைகண்டு நீக்கிடவும் கவிதைப்பெண்ணே
   செற்றமது வேண்டாவே என்பாலென்றும்-நல்
      செம்மொழியே துணையாக  இருப்பாயென்றும்
  
    உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
      உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
   தொண்மைமிகு  தனித்தமிழே வருவாயாக-உன்னை
      தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
   தண்மைமிகு தென்றலென  தழுவநீயே-நெஞ்நில்
      தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
   திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
      தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே
         
                      புலவர் சா இராமாநுசம்
 

 

Monday, October 3, 2011

நல்லோர் மட்டுமே ஆளட்டும்



       மனித நேயம் காணவில்லை-என்ற
          மனக்குறை மாற  வழியில்லை
       புனிதர் யாரும் காணவில்லை-நல்
          புத்தியைக் காணவும்  வழியில்லை
       கனிவை சொல்லில் காணவில்லை-என்ன
          காரணம் அறியவும் வழியில்லை
       இனிதாய் நடப்பார் காணவில்லை-நல்
          இதயமே அந்தோ காணவில்லை
      
        உலகம் எங்கே போகிறதோ-என
          உள்ளம் பற்றியே வேகிறதே
       கலகம் எங்கும் நடக்கிறதே-வீண்
          காலம் இப்படி கடக்கிறதே
       திலகம் புத்தர் காந்தியென-இந்து
          தேசத்தில் பிறந்தது போலியென
       புலரும் பொழுது ஒவ்வொன்றும்-தினம்
          புகர மாறுமா இதுவென்றும்
     
      சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
        சமயப்பூசல் குறைய வில்லை
      நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
        நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்
      பீதிவாழ்வே தொடர் கதையாய்-எதிர்த்து
        பேசினால் அந்தோ அடிஉதையாய்
      வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-என்ற
        வேதனை தானே மிஞ்சுவதே
    
     என்று மாறும் இந்நிலையே-நம்
        இந்திய நாட்டின் தன்நிலையே
     இன்றுப் போன்றே இருந்திடுமா-தன்
        இழிநிலை கண்டு திருந்திடுமா
     சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
        செம்மை வழியில் நடக்கட்டும்
     நன்றென உலகம் போற்றட்டும்-மிக
        நல்லோர் மட்டுமே ஆளட்டும்

              புலவர் சா இராமாநுசம்
         

    

Sunday, October 2, 2011

அண்ணல் காந்தி பிறந்தநாள்



  அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
  அடிமை விலங்கை அகற்றினார் அன்றே
  திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
  தேடிக்  கொடுத்தார் விடுதலை ஒன்றே
  உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
  உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
  மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
  மாகாத்மா வாக மதித்தது!  இவரே!
 
  நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
  நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி
  அறவழிப் நடந்து ஆப்பிரிக்க நாட்டில்
  அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்
  தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
  தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க
  வேண்டா மையா சமூக கொடுமை
  விட்டது இதுவரை நம்செயல் மடமை
 
  இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
  ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
  உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
  உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்
  எடுத்தார் விரதம் இறுதி வரையில்
  இறந்து வீழ்ந்தார் முடிவென தரையில்
  கொடுத்தனர்  பாவிகள் குண்டாம்பரிசே
  கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே
 
  எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
  இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
  புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
  பதவியை நாடா பண்பினில் திலகம்
  சத்திய சோதனை வாழ்வாய் கொண்டே
  சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
  உத்தம உன்புகழ் உலகில் வாழ்க!
  உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

                     புலவர்  சா இராமாநுசம்