Friday, September 16, 2011

அண்ணா வழியில் ஆள்வோரே

பற்றி எரியுது கூடங்குளம்-ஆய்ந்து
    பாரா மத்தியில் ஆளுமினம்
சற்றும் அதனை எண்ணாமே-பலர்
    சாகும் வரையில் உண்ணாமே
முற்ற விடுவது முறைதானா-காந்தி
    முறைப்படி அறப்போர் குறைதானா
கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
    காட்டியும் புத்தி வாராதா

கேளாக் காதாய் செவிமூட-வரும்
    கேட்டைச் சொல்லியும் வாய்மூட
வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
    வளர்ந்த நாடுகள் பலசொல்ல
நாளாய் பயந்து அங்குள்ளோர்-இன்று
    நடத்தும் போரில் பங்குள்ளார்
தாளாத் துயரில் தவிக்கின்றார்-மகளிர்
    தரையிலும் துவண்டு கிடக்கின்றார்

உண்ணா விரதம் இருப்பதென்ன-தம்
    உடலை வருத்தி கொள்வதற்கா
அண்ணா வழியில் ஆள்வோரே-இதில்
    அலட்சியம் வேண்டாம் மாள்வாரே
கண்ணா மூச்சி விளையாட்டா-வழி
    காண்டே உடனதைக் களையாட்டா
மண்ணே ஆகும் சுடுகாடே-பெரும்
    மக்கள் திரண்டால் வரும்கேடே

மத்திய மாநில அரசுகளே-அந்த
    மக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
    காலத்தை வீணில் கடத்தாதீர்
உத்மர் காந்தி அறவழியே—இன்று
    உள்ளவர் மனதைப் பிறவழியே
சித்தமே செல்ல விடுவீரா-உம்
    செயலால் நீரே கெடுவீரா

Thursday, September 15, 2011

இன்றென் பதிவு நூறாகும்

இன்றென் பதிவு நூறாகும்-என்
     இதயம் மறவாப் பேறாகும்
நன்றெனச் செல்லி நாள்தோறும்-கருத்து
    நல்கிட  உலகுள்  ஊர்தோறும்
குன்றென வளர்தீர் உறவுகளே-நீர்
    கொடுத்தீர் பறக்க சிறகுகளே
ஒன்றல போற்றி ஆயிரமே-உம்மை
   உரைத்திட வேண்டும் பாயிரமே

முடங்கிக் கிடந்தேன் மூலையிலே-இன்று
    முளைக்கும் விதையாய் வலையினிலே
தடமது  ஊன்றி நடக்கின்றேன்-முதுமை
     தடைபல தரினும் கடக்கின்றேன்
இடமது  எனக்கென  நல்லோரே-உம்
     இதயத்தில்  அளிப்பீர்  பல்லோரே
விடமது  தரினும் உண்பேனே-குறள்
    விளக்கிய  வழிசெலும்  பண்போனே

நன்றி மறப்பது  நன்றல்ல -பாடம்
    நடத்தி  அவ்வழி  நான்செல்ல
இன்றும் மறவா  திருக்கின்றேன்-அது
     எனக்கும்  பாடமாய்  மதிக்கின்றேன்
என்று  போகும் என்உயிரோ-நான்
     இருக்கும் வரையில் தமிழ்ப்பயிரே
ஒன்றென வளர்த்தது  வாழ்வேனே-தேவை
    உயிரெனில்  கொடுத்தும்  வீழ்வேனே

தனிமரம் அல்ல  நானின்றே-கற்ற
     தமிழ்வழித்  தேடி  தினம்சென்றே
நனிமரம் பெற்ற  தோப்பானேன்-வலை
     நல்லோர் துணைதரக்  காப்பானேன்
இனிதுயர் என்றும்  எனக்கில்லை-கவிதை
      இயற்ற  உண்டா  அதற்கெல்லை
பனித்துளி போல  உலெகங்கும்-அலையில்
       பரவியே  என்றும்  அவைதங்கும்

Tuesday, September 13, 2011

குறள் வழி ஈகை

 
சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபல

புலம்பி அழுதால் வந்திடுமா-போன
பொருளும் பாடம் தந்திடுமா
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

Sunday, September 11, 2011

அவளும் நானும்


 நேற்று  அன்பர் வேடந்தாங்கல் கருன் அவர்கள்
 எழுப்பிய ஐயத்திற்கு விடையே இக் கவிதை
 ஆகும்.! நன்றி!
                    

காதலித்தே ஆண்டுபல காத்துத் தானே-நாம்
  கைபிடித்து மணமுடித்தோம் அறிந்தும் வீணே
சாதலிலே மட்டும்நீ முந்திக் கொண்டாய்-அது
  சரிதானா என்னிடத்து  குறையென்   கண்டாய்
பேதலித்து இரவுதினம் அழவும் இங்கே-என்னைப்
  பிரியமனம் வைத்தவளே சென்றாய் எங்கே
மாதர்குல மாமணியே செய்தாய் வஞ்சம்-நீ
  மறந்தாயா பறந்தாயே பதற நெஞ்சம்

ஊரெல்லாம் நமைப்பற்றி தூற்றும் போதும்-நம்
  உறுதிதனை அறிந்துப்பின் போற்றும் போதும்
யாரெல்லாம் எதிர்த்தாரோ உறவில் அன்றே-பின்னர்
  யாதொன்றும் கூறாமல் விரும்பி நின்றே
சீரெல்லாம் தந்ததுடன் வாழ்த்திச் சென்றார்-ஆனால்
  சிலர்மட்டும் புழுங்கிமனம் ஒதிங்கி நின்றார்
வேரற்ற மரமானேன் அந்தோ வீழ்வேன்-காதல்
  விளையாட்டா நீயின்றி எவ்வண் வாழ்வேன்

பட்டணத்தில் நீபடித்துப் பட்டம் பெற்றாய்-ஏன்
  பட்டிகாட்டான் என்மீது காதல் உற்றாய்
மட்டமென ஒருநாளும் இறுதி வரையில்-என்னை
  மனத்தாலும் எள்ளவும் எண்ணா நிலையில்
திட்டமிட்டா எனைவிட்டு விலகிச் சென்றாய்-செல்லும்
  திசையறியா மாலுமியாய் திகைக்க நன்றாய்
வட்டமிட வல்லூறு அஞ்சும் பறவை -என
  வாழ்கின்றேன் அறிவாயா நமது உறவை

வாழ்வதுவும் வீழ்வதுவும் என்றும் ஒன்றாய் -எதிர்
  வரலாறு நமைப்பற்றி சொல்லும் என்றாய்
தாழ்வதிலே வந்ததடி நியாயம் தானா-ஆ
  தாரமென நினைத்தேனே அனைத்தும் வீணா
ஏழ்பிறவி  என்பதுவும் உண்மை யானால்-அடி
  என்னவளே எனதுணைவி நீயே ஆனால்
ஊழ்வென்ன செய்யுமடி தோற்றே போகும்-காதல்
  உண்மையென  இவ்வுலகே சாற்ற லாகும்
 
மருத்துவத்தில் மகளிர்கென பெற்றாய் பட்டம்-நான்
  மாத்தமிழில் புலவரென பெற்றேன் பட்டம்
பொருத்தமுண்டா எனப்பலரும் கேட்ட போதும்-நீ
  பொறுமைமிக சிரித்ததெந்தன் நெஞ்சில் மோதும்
திருத்தமுற இறுதிவரை ஊரும் மெச்ச-வாழ்க்கைத்
  தேரோட எதற்காகத் தேரின் அச்சே
வருத்தமுற முறித்தாயே நியாயம் தானா-கேள்வி
  வாட்டுதடி வழியறியேன் வாழல் வீணா

கலப்புமணம் காதலொடு செய்து கொண்டோம்-இரண்டு
  கண்ணெனவே பெண்மகளீர் பெற்றுக் கொண்டோம்
சலசலப்பு பலவந்தும் துவண்டா போனோம்-காலம்
  கடந்தாலும் காத்திருந்தே ஒன்றாய் ஆனோம்
இலைமறைவு காயான சொந்தம் கூட- நீ
  இல்லையென ஆனதுமே விலகி ஓட
வலையுலகு நெஞ்சங்களே துணையாய் ஆக-இன்று
  வாழ்கின்றேன் தனிமையெனும் துயரம் போக

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...