Saturday, September 10, 2011

காதல் போயின்


காதல் போயின் சாதல் நன்றே-இது
    கதையல நாட்டில் நடப்பதாம் ஒன்றே
மாதர்கள் சிலரும் இளைஞர் சிலரும்-இன்றும்
    மடிவதை தினசரி செய்திகள் பகரும்
வேதனையாக வெளிவரக் கண்டே-பெற்றவர்
    வெந்துப் புண்ணாய் மாய்வதும் உண்டே
தீதாம் இதனை இளையோர் கருதி-உடன்  
    தெளிந்திடின் வாரா உயிருக் கிறுதி

வாழத் பிறந்தவர் உலகில் நாமே-காதல்
   வாலிப வயதில் வருவது ஆமே
ஆழமாய் சிலரின் மனதில் அதுவே-சிறந்த
   அன்பென ஊன்றி நிலைத்திடும் பதிவே
சூழவும் உள்ள சொந்த பந்தம்-எதிர்ப்பு
   சொல்லியே ஆதனைத் தடுத்திட முந்தும்
வீழவா முடிவு எடுப்பது விவேகம்-முயன்று
   வெற்றியை எட்டிட காட்டுவீர் வேகம்

பள்ளம் மேடாம் காதல் பாதை-அதில்
   பயணம் செய்யின் வருவது போதை
வெள்ளம் போல எதிர்ப்பே வரினும்-காதல்
   வெற்றிக்கி  தடைபல நாளும் தரினும்
அள்ள வந்திடும் நீரல காதல்-எளிதில்
   அடைய இயலா அறிந்துமா சாதல்
 உள்ளம் உறுதி உடையவர் ஆவீர்-கொண்ட
   உண்மைக் காதலில் வெல்வீர் நீவீர்
   

Friday, September 9, 2011

மண்ணுக்கு மரியாதை


மண்ணுக்கு மரியாதை தாமே-பிறந்த
மண்ணுக்குத் தருவது ஆமே
விண்ணுக்குச் சென்றாலும் மறையா-சிங்கள
வெறியர்கள் வென்றதும் முறையா
கண்ணுகுத் தெரிந்திட ஈழம்-விரைவில்
'கை'தட்டி வரவேற்க வாழும்
புண்ணுக்கு மருந்தாக நன்றாய்-உலகம்
போற்றிட சேருவோம் ஒன்றாய்

ஈழத்து மண்ணிலே இரத்தம்-அன்று
இழந்தனர் அந்தோ நித்தம்
வாழத்தான் வழியின்றி அவரே-இன்று
வாடிட விடுவதும் தவறே
சூழத்தான் வேண்டாமா இங்கே-பதில்
சொல்லுங்கள் தமிழுணர் வெங்கே
வீழத்தான் பார்பதும் கெடுதல்-தமிழ்
வேரிலே வென்னீரும் விடுதல்

இன்றில்லை என்றாலும் நாளை-இதை
எண்ணி வருந்திடும் வேளை
ஒன்றது வந்திடும் பாரும்-அது
உருவாக வேண்டுமா கூறும்
நன்றெது விரைவாக எண்ணி-தமிழ்
நாட்டோரே முடிவொன்று பண்ணி
குன்றென உறுதியாய் நின்றே-ஈழம்
கொடுத்திடத் துணையாவோம் இன்றே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, September 7, 2011

குறள் வழி நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்
உற்றால் நண்பனும் உடன்சால
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி
தந்திட வேண்டும் அஃதொன்றே
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்
இயம்பிய கருத்தும் மிகநன்றே
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்
எடுப்பார் பிரியா இணையென்றே

உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது
புரிந்தால் போதும் ஈண்டாவே
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு
தமிழ்போல் அழியா நிலைநாடும்
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு
வாரா என்றும் முழுமதியாம்

நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்
நட்பினைச் சொல்லல் சாலுமென
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்
பழகினால் அவர்பால் ஆகும்மென
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்
முறையின்றி நடப்பின் தடைசொல்ல
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்
அறைந்ததை அறிவீர் நீரின்றே

Tuesday, September 6, 2011

பேணிக் காப்போமே மருந்தின்றே!

நோயற்ற வாழ்வுக்கு என்னவழி-காண
   நோக்குவீர் முன்னோரும் சொன்னமொழி
 வாயற்ற சீவனை உண்ணவேண்டா-என
   வாழ்வினில் எவருமே உறுதிபூண்டா
 பாயுற்று நோயுற்று வீழவேண்டாம்-தூய
   பச்சை காய்தன்னை உண்ணலிண்டாம்
காய்முற்றி கனிதன்னை நாளுமுண்ண-தேடி
         காலனும் வருநாளும் தள்ளபின்னே

அற்றது அறிந்துமே உண்பீரெனில்-அதுவும்
    அளவாய் அறிந்துமே உண்பீரெனில்
மற்றது குறையினும் அதிகமெனில்-நோய்
    மறைவது வருவது ஆகுமெனில்
உற்றதை வள்ளுவர் உரைத்தபடி-நாம்
    உணர்ந்துமே செயல்படின் அன்னபடி
பெற்றிட உணவினை அருந்தின்றே-உடலை
    பேணிக் காப்போமே மருந்தின்றே

Sunday, September 4, 2011

என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்

என்னை சுற்றி உங்கள் சிந்தனைகள்
எதற்கு வீணாம் தருவீர் நிந்தனைகள்
தன்னைத் தானே இவ்வுலகம் தினம்
தட்டா மாலையாய் சுற்றல் போல்
அன்னை வயிற்றில் அவதறித்து இந்த
அவனியில் உதித்த  இன்று வரை
சொன்னதை ஏதும் செய்தேனா நானும்
சுற்றம் உலகென நாளும் வந்தேனா

வையம் தன்னில வாழ்வாங்கு வாழ
வகுத்த வள்ளுவன் குறள் ஓங்க
செய்யும் செயலில் கொண்டேனா நான்
செய்வது தவறெனக் கண்டேனா
பொய்யும் புரட்டும் உலகெங்கும்
போகிற வழியில் நானெங்கும்
பையில் பணமே உள்ளவரை நடந்த
பாதையைச் சொன்னால் நிந்தனைகள்

பெரிதாய் என்ன சாதித்தேன் செய்த
பிழையைச் சொன்னால் நிந்தித்தேன்
அரிதாய் ஏதே இரண்டொன்றே நானும்
ஆற்றிய துண்டா அறியேனே
உரிதா ஏதும் இல்லையென நீர்
உணர்வீர் தெளிவீர் எனவே தான்
தெரியாத் தனமாய் எனைச் சுற்றி வீணாக
எதற்கு வேண்டும் உங்கள் சிந்தனைகள்

புலவர் சா இராமாநுசம்