உயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை
உணராது உறக்கத்தில் விழிகள் மூட
மயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட
மறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா
வயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ
வந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே
கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்
கடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே
செய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி
செப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே
பொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்
போடுவீரே தூக்கென ஆள்வோர் சொல்ல
ஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்
அடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்
மெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு
மேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே
வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்
காணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்
காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்
தூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை
துரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்
இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற
கரக்கமலம் குவித்து உமை வேண்டுகின்றோம்-உயிர்
காத்திடுவீர்! கனிவுடனே என்றேமீண்டும்
உரக்ககுரல் கொடுக்கின்றார் தமிழர்! உண்மை-எனில்
ஒற்றுமைக்கு உலைவைப்பார் நீரே! திண்மை
புலவர் சா இராமாநுசம்