Saturday, August 13, 2011

தேர்தலோ தேர்தல்

தேர்தலின் போது எழுதிய கவிதை

நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாருமிங்கே
வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள
வந்தவர் போடுவார் கொட்டமென
பல்லோரே சேருவார் கூட்டணியே- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டினியே
சொல்வாரே கூசாமல் நாக்குமின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்கமென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்றுகூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போருமாடி
என்நலம் காப்பதாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந்திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்னவழி

யாராள வந்தாலும்ஊழல்மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல்மட்டும்
வாராது ஒருநாளும் உண்மையிது-கடந்த
வராலாறு காட்டிடும்தன்மையிது
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி
கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே

வந்ததேலாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவாரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவாரந்தோ
சிந்தனை செய்திட வேண்டுமுடன்-என
செப்பியே மக்களை தூண்டுமுடன்
வந்தனை கூறியே முடித்தேனதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்தேனதை

                                    புலவர் சா இராமாநுசம்



Thursday, August 11, 2011

போதுமடா சாமி....

போதுமடா சாமி-நாங்க
பொழைக்க வழி காமி
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும ஆச்சே
சாதி சண்டை ஓங்க-நல்
சமத் துவமே நீங்க
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க

ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும பிணியே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 10, 2011

ஓடி உதைத்து விளையாடு…

ஓடி உதைத்து விளையாடு-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மை
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே
முயற்சி ஒன்றே திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சி கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே

ஒவ்வொர் நாளும் விளையாடு-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழி போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண

Tuesday, August 9, 2011

முதலாளித்துவத்தின் சுறண்டல்

முதலாளி தத்துவமே சுறண்ட லென்றே-என
மொழிதலிலே வேறுபாடு ஏதும் இன்றே
அதனாலே பிறந்ததுவே மேதினமும் ஒன்றே
அகிலமே கொண்டாடும் திருநாளாம் நன்றே
இதனாலே அடங்கியது முதலாளி உலகம்
என்றாலும் அங்கங்கே நடக்கிறது கலகம்
எதனாலே என்றாலே நல்ஊதியமே கோரி
எழகிறது போராட்டம் தடைதன்னை மீறி

சங்கங்கள எல்லாமே ஒன்றாக கூட-பெரும்
சங்கடம் முதலாளி நெஞ்சிலே ஓட
உங்களை அழைப்பதாய் ஓடிவரும் செய்தி
உடன்சென்று பேசிட ஒப்பந்தம் யெயதி
இவ்வாறு நடக்கிறது நாட்டினிலே இன்றே
இனிமேலும் ஆகாது சுறண்டலாம் ஒன்றே
எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி

புலவர் சா இராமாநுசம்

Sunday, August 7, 2011

விரட்டி இருக்க வேண்டாமா

மும்பையில் நடந்த மட்டைப்  பந்து விளையாட்டை வந்து  பக்சே  பார்த்து விட்டு திரும்பிய போது எழுதிய கவிதை 



           மட்டைப்  பந்து  ஆட்டத்தை-மும்பை
                 மண்ணில் காணும் நாட்டத்தில்
            திட்ட மிட்டே வந்தானா-பகசே
                 திடீர் வரவு தந்தானா
            சட்டைக் கிழிய அடிக்காமல்-நல்
                  சவுக்கால் உடலை சொடுக்காமல்
            விட்டதே போதும்  என்றோட-அவனை
                  விரட்டி இருக்க வேண்டாமா

           மண்ணின் மைந்தரே  மராட்டியரே-சிவாஜி
                 மரபில்  வந்த  தீரர்களே
           எண்ணிப் பாரும் வந்ததெவன்-நெஞ்சில்
                  இரக்க மில்லா அரக்கனவன்
           புண்ணைக் கிளறி இரணமாக்கி-வந்து
                   போனான் பக்சே புறம்போக்கி
           கண்ணில் இனிமேல் நீர்கண்டால்-முகத்தில
                  காறித்  துப்ப  மறவாதீர்

           ஏகம் இந்தியா எனப்பேசி-இனியும்
                  இருப்பது கற்பனை மனங்கூசி
            வேகம் காட்ட முனைவோமா-அதுவே
                  விவேகம் என்றதைக் கொள்வோமா
            தாகம் தணிக்க தண்ணீரும-சிங்களர்
                  தந்தால் உண்டாம் கண்ணீரும
            சோகம் காட்டும வார்ப்படமாய்-ஈழ
                  சோதரர் வாழ்வது திரைப்படமா

            ஒன்றா இரண்டா உரைப்பதற்கே-தமிழ்
                  உணர்வே இன்றெனில நாமெதற்கே
            நன்றா இதுதான் தமிழ்நாடே-இப்டி
                  நடந்தால் உனக்கது பெருங்கேடே
            குன்றாய் உறுதி நீகொண்டே-ஈழம்
                  கொடுத்திட ஏற்ற  வழிகண்டே
            நின்றால் துணையாய் தரும்வெற்றி-உலகில்
                  நிலத்து  நிற்கும்  நம்பெற்றி
                      
                                    புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...