Saturday, August 6, 2011

சூரிய தேவனுக்கு...

கோடை ஆரம்பித்த போது எழுதிய கவிதை 

சூரிய தேவனுக்கென் வேண்டுகோளே-எமை
சுட்டிட எதிர்வரும் கோடைநாளே
வீரியம் குறைந்திட வாரும்ஐயா-எனில்
வெந்து மடிவோமே என்ன பொய்யா
ஏரியும் குளங்களும எங்கும்வற்ற-நீர்
இல்லாமல் புல்வெளி தீயும்பற்ற
வேரிலும் நீரின்றி செடிகொடிகள்-மாள
வேண்டாமே உம்முடை கெடுபிடிகள

கெட்டதே உலகெங்கும சுற்றுசூழல்-இந்த
கொடுமையில் உயிரினம் எவ்வண்வாழல்
விட்டுவிட்டே இங்கே பனியும பெய்ய-தரும்
வேதனை நீங்கட என்னசெய்ய
சொட்டும் மழையின்றி ஒருபக்கமே-வெள்ள
சோதனை தாங்காது மறுபக்கமே
திட்டமே உலகெங்கும் பேசுகின்றார்-ஆனால்
தீராது என்றென்றும் சுற்றுசூழல்மாசே

எதிர்கால சந்ததி நிலமைஎன்ன-அதை
எண்ணாமல் இன்றுள்ளோர் செய்வதென்ன
புதிதாக நாள்தோறும் இயற்கையன்னை-அழிய
போடுவார் அந்தோ திட்டம்தன்னை
மெதுவாக அழிவிங்கே தேடி வர-எனில்
மேலும் எதற்காக பாடல் தர
எதுவாக இருந்தாலும் காலம்சொல்லும்-இதன்
எதிர்வினை யாதென ஞாலம்சொல்லும்

புலவர்  சா இராமாநுசம்

Friday, August 5, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

       
     மீள் பதிவு
 
   ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
      உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
   பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
     பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
   சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
     செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
   வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
     விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

   தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
   இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
   கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
   பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
  ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
  ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம்

Thursday, August 4, 2011

அன்னையே

மீள் பதிவு

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்
அமைவாரே ஓய்வாக ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீரம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீ ரம்மா
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே

உண்ணுகின்ற உணவென்ன பார்துத்தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுதானே
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீரம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மாஅம்மா
மண்மூடிப் போனாலும் அந்தோஉன்னை-மனம்
மூட யியலாது வருந்தும் அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கேஎங்கே

புலவர் சா இராமாநுசம்

Tuesday, August 2, 2011

ஆழிப் பேரலை

ஜப்பானை சுனாமி தாக்கிய போது எழுதியது

அப்பா அப்பா அப்பப்பா-ஜப்பான்
அழிந்த நிலையைப் பாரப்பா
தப்பா தப்பா தப்பப்பா-கடலை
தாயென அழைத்தது யாரப்பா
உப்பா உப்பா உப்பப்பா-ஆனால
உணவே உப்பா கூறப்பா
இப்பா இப்பா இப்பாவப்பா-என்
இதய வேதனை உணர்வப்பா

சொல்லில் அடங்கா காட்சியப்பா-எனில்
சொல்ல வேணுமா சாட்சியப்பா
வில்லில் விடுபடும் அம்பைவிட-இதன்
வேகம் ஆயிரம் மடங்குபட
கொல்லும் கொலைவெறி கூச்சலிட-காணில்
கூற்றனும் கூட‍ அச்சபட
புல்லும பூண்டும மிஞ்சவில்லை-அங்கே
போயின அனைத்தும ஏதுஎல்லை

குப்பைஅள்ளி கொட்டினபோல்-எங்கும்
குவிந்தது மனித உடலங்கே
தப்பை செய்தாய் தாயாநீ-எவரும்
தடுக்க இயலா பேயாநீ
செப்ப உவமை உனக்குண்டா-இனியும்
செப்பிடத் தாயென வழிவுண்டா
எப்போ எழவாய் வருவாயோ-என
ஏங்கும் நிலைதான தருவாயோ

அணுவின் உலையும் போயிற்றே-ஊர்
அனைத்தும இருளாய் ஆயிற்றே
கணுவில் துளிரும கருகிவிட-எங்கும
காணும் காட்சிகள கண்ணீரவிட
இனியும எதற்கு அழித்துவிடு-இவ்
உலகை உன்னுள் ஆழ்த்துவிடு
கனிவுடன் உன்னை வேண்டுகிறேன்-மனம்
கனிந்து உடனிதை செய்வாயா---

புலவர் சா இராமாநுசம்

Monday, August 1, 2011

தரணியில் என்றும் நிலையாகும்

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க

எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதிவ திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்

Sunday, July 31, 2011

எம்மைப் பற்றி ஏதேனும

வார்ப்பு  இதழுக்கு நான எழுதிய வாழ்த்துக் கவிதை

எம்மைப் பற்றி ஏதேனும்-நீர்
எழுத விரும்பின் எழுதுமென
நம்மைப் பற்றி உலகறிய-வாய்ப்பு
நல்கிய வார்ப்பு குழுவுக்கே
செம்மைத் தமிழில் கைகூப்பி-நான்
செப்பிடும் வணக்கக் கவிதையிது
உம்மை என்றும போற்றிடுவோம்-எம்
உயிரின் உயிரென சாற்றிடுவோம்


வலைப்பூ தன்னில் வார்ப்பென்றே-தமிழ்
வளர்க்க நீரும் மிகநன்றே
தலைப்பூ தந்தீர் பாராட்ட-நல்
தமிழை வளர்த்து சீராட்ட
விலைப்பூ அல்ல முத்தணியே-கண்டோர்
வியக்க போற்றம் உம்பணியே
கலைப்பூ இதுவாம் கவிதைப்பூ-இளம்
கவிஞர் வளரத் தரும்வாய்பு


சொல்லைக்  கோர்த்து உருவாக்கி-தாம்
சொல்ல நினைத்ததை கருவாக்கி
எல்லை இல்லா இளங்கவிஞர்–இன்று
எழுதிட போற்றுவர் நல்லறிஞர்
தொல்லை மிகுந்ததே இதழ்பணியே-வார்ப்பு
தொடர்ந்து வருவதே தமிழ்பணியே
ஒல்லை வார்ப்பு வளர்ந்திடவே-நாம்
ஒன்றாய் அனைவரும் சேர்ந்திடுவோம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...