Saturday, July 30, 2011

மக்களை அரசே திரட்டட்டும்

மீண்டும்  மீண்டும்  வருகின்றான்-நம்
     மீனவர் வலையை அறுக்கின்றான்
 தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
     துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
 ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே
 வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும்  வழியின்றே


எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
    எடுபிடி யாக  ஆவார்கள்
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
    மேலும் போவது அவமானம்
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
     புத்தரே சொல்லினும் கேளாரே
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
    எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்


ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
   அம்மா   அவர்கே   கதிநீரே
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
   கொடுப்பீர் மத்திக்கு இப்போதே
மீறினால் வருமே போராட்டம்-என
    மத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
    மக்களை அரசே திரட்டட்டும்

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
  பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்
அடித்தான் நேற்றும் தொடர்கதையா-இந்த
  அவலம் மீனவன்  தலைவிதியா
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
  தமிழக அரசே உடன்ஒல்லை
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
  எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை
    

           புலவர் சா இராமாநுசம்

Thursday, July 28, 2011

முத்தான மூன்று முடிச்சு



அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி  அவர்களின் அன்பு ஆணையை ஏற்று  இப் பதிவினை  இங்கே பதிவு செய்துள்ளேன். 
நன்றி

  இறை வணக்கம்-
           தாய்
           தந்தை
           வேங்கடவன்
  மிகவும் பிடித்தவை-
          எல்லா வற்றுக்கும் ஆதாரமாக
              வந்த தாரம்
          விழாது தாங்க விழுதென தாங்கும்
              நான் பெற்ற இருபெண்கள்
          என்னிலும் அறிவுடமை பெற்ற
              பேரர்கள் பேத்தி
  பிடித்தவை-
           முத்தமிழ்- இயல், இசை நாடகம்
           முக்கனி-மா, பலா, வாழை
           முந்நூல்-குறள், சிலம்பு, கம்பன் காவியம்
  இலக்கியம்-
           சங்க கால இலக்கியம்
           இடைக்கால இலக்கியம்
           தற்கால இலக்கியம்
  வாழவியல் நெறி-
           உண்மை, நேர்மை, நீதி
  கடை பிடித்தன-
           அ-வில் மூன்று-அன்பு,அறிவு, அடக்கம்
           இ-வில் மூன்று-இரக்கம், இன்சொல், ஈகை
           ப-வில் மூன்று-பண்பு, பக்தி, பணிவு
           ந-வில் மூன்று-நட்பு, நன்றி, நம்பிக்கை
           க-வில் மூன்று-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
  பொன்னுரை-
           நடந்ததை மறப்போம்
           நடப்பன நினைப்போம்
           வருவன வரட்டும்
  படித்த பிடித்த வரிகள்-
           யாதும் ஊரே யாவரும் கேளீர்
           உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
           எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
  பாடல்-
           தேவாரம், திருவாசகம், சித்தர் பாடல்
  பழமொழிகள்-
           குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
           கிட்டாதாயின் பட்டென மற
           போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து
  குணநலன்- 
            கோபம்(கொஞ்சம்)
            பணிவும்
            துணிவும்(வேண்டியளவு)
  பிடிக்காதன-
            அதிகாரம் பிடிக்காது
              அதிகாரம் பண்ணவும் பிடிக்காது
            சண்டை பிடிக்காது 
              சரணா கதியும் பிடிக்காது
            ஆணவம்  பிடிக்காது
  மிகவும் பிடிக்காதன-
                1   போகவிட்டு புறம் பேசுதல்
        தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தல்
        நம்ப வைத்து கழுத் தறுத்தல்
               2    வஞ்சக மாகப் பழகுதல்
          வன்சொல் பேசுதல்
          வீண் அரட்டை அடித்தல்
              3     இரக்க மின்றி நடத்தல்
              ஈகையை தடுத்தல்
        ஏழ்மையை இகழ்தல்

 இன்னும் பல, எண்ணே இல, சொன்னது சில

 விருப்பு –  கணினி ,கவிதை, கருத்துரை

   வெறுப்பு - பச்சேந்தி குணம்,பணத்திமிர், பகல்வேஷம்

   வேண்டாத இயல்புகள்-
         பேராசை, பிடிவாதம், அழுக்காறு
 வருந்தியது-
         அறியாமல் பிறர் முகம் வாட பேசிவிடுவது
         அல்லல்படும்  யாருக்கும் உதவமுடியாத நிலையில்
         உவப்பக் கூடிய நண்பர்கள் உள்ளப் பிரியும் போது

   மறக்க முடியாதது- 
          தமிழகத் தமிழாசிரியர் கழகதின்  மாநிலத் தலைவராக பதினைந்து ஆண்டுகள் 
          பணியாற்றியது
          அதுபோது அமைச்சர்கள், அதிகாரிகள் இடத்தில்  அன்போடும், பண்போடும், 
          பணிவோடும் துணிவோடும் நடந்ததை அவர்கள் பாராட்டியது
          தற்போது நீங்கள் அனைவரும் என்னிடம் காட்டுகின்ற அன்பும் ஆதரவும்

   மறக்க நினைப்பவை-
                நண்பரகள் சிலரின் துரோகம்
                சுற்றத்தார் சிலர் செய்த வஞ்சகம்
                இன்னும் இன்னும்.....போதும்

   நெஞ்சம் எதிர் நோக்கும் ஆசை-
            1.       தனி ஈழம் மலரவேண்டும்
            2.       நான் அதை வாழ்த்திப் பாட வேண்டும்
            3.       அதுவரை நான் வாழ வேண்டும்...?

   முடிவு-
           அன்பு நெஞ்சங்களே முத்தான மூன்று முடிச்சுகளை எழுதி விண்ணில் தவழ
     விட்டு விட்டேன். தட்டினால் உங்களை நாடி வரும். ஆனால், நான் போட்ட மூன்று 
     முடிச்சுக்கு உரியவள், ஆம் என்னவள்  மூன்று முடிச்சுகளோடு போய்விட்டவள்
     வருவாளா...?
     
          நன்றி

Wednesday, July 27, 2011

புத்தரைப் போல தெளியுங்கள்

தியாகம் தியாகமென -காந்தி
தினமும் செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக் குண்டோ எல்லை

பெற்ற விடுதலை பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணாம் சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 26, 2011

அந்த ஒருநாள்

அந்த ஒருநாள் அறிவீரா-அவர்
அழைத்தால காண வருவீரா
சொந்த மண்ணாம் தனிஈழம்-உலகம்
சொல்ல வளமே நனிசூழும்
நொந்த மக்கள் கொண்டாட-அவரை
நேகச் செய்தார் திண்டாட
வந்தார் தம்மை வரவேற்றே-தமிழர்
வாழ்ந்த முறையை நிறைவேற்ற
காண
அந்த ஒருநாள் வந்திடுவோம்-அவர்
அழைக்க வாழத்தும் தந்திடுவோம்

புலவர் சா இராமாநுசம்

Monday, July 25, 2011

சித்தம் வைப்பீர் ஆள்வோரே

     சின்னப் பையன் வருவானே-தினம்
           செய்தித் தாளும் தருவானே
     சன்னல் வழியும் எறிவானே –கதவு
           சாத்திட குரலும் தருவானே
     இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
           இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா
     என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
           இறைவனை எண்ணி நிந்தித்தேன்

    பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
           பாடம் படிக்கும் வயதன்றோ
    துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
           துரத்த ஓடும் வயதன்றோ
     அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
           அறுத்த செருப்புக் காலோடும்
    தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
           தவறின் திட்டும் பெறுவானே

     சட்டம்  போட்டும் பயன்தருமா-கல்வி
           சமச்சீர் ஆகும் நிலைவருமா
     இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
           ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்
     திட்டம் மட்டுமே போடுகின்றார்-தம்
           தேவைக்கு அதிலே தேடுகின்றார்
     கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
           கொடிகட்டி பறக்குது! நாதியிலே!

     இமயம் முதலாய் குமரிவரை-எங்கும
           இருந்திட வேண்டும் ஒரேமுறை
     நம்மைஆள தேர்தல்முறை-இன்று
           நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
     அமைய குரலும் தொடுப்பீரே-கல்வி
           ஆணையம் அமைத்து கொடுப்பீரே
     சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
           சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

     எத்தனை சொல்லியும் என்னநிலை-தினம்
           எண்ணியே பெற்றோர் படும்கவலை
     புத்தகம் எதுவெனத் தெரியவில்லை-பாடம்
           போதிக்க இதுவென அறியவில்லை
     பித்தம் பிடிக்கும் செய்தித்தாள்-இப்படி
           போடும் செய்தி நீடித்தால்
     சித்தம் வைப்பீர் ஆள்வோரே-முடிவு
           செய்திட மக்கள் வாழ்வாரே