Saturday, July 23, 2011

கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
          அதன் விளைவே, நினைவே இக் கவிதை

பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்
செழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதே கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மறவீர் மறவீர் நீரே வெல்வீர்

புலவர் சா இராமாநுசம்

Friday, July 22, 2011

சித்தரைப் பெண்ணே

            இத்தரை மீதினில்
            சித்தரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப புடைசூழ பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமை தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமை தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Thursday, July 21, 2011

இறுதிமூச்சு உள்ள வரை

இறுதிமூச்சு உள்ள வரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா
குருதிசிந்த கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமே-இந்த
உலகம் உணர உய்வோமே
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணரந்து வருவரே

அடங்கிப் போனோம் நாமன்றே-ஆளும்
ஆணவ ஆடச்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமே-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமே
ஒடுங்க மாட்டோம நாமென்றே-அவர்
உணர எதிர்த்து தினம்நின்றே
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 20, 2011

ஈழம் மகிழ்விலே திளைத்து ஆட

கட்டிய நாய்கள் கூட-தம்
  கயிற்றொடு எகிறி ஆட
எட்டிய மட்டும் பாயும்-மூச்சு
  இறைக்கவே குரைத்து ஓயும்
பட்டியில் அடைத்த மாடாய்-உடல்
  பசியினால் வற்றி ஓடாய்
தொட்டியும் உடைந்த மீனாய்-ஈழர்
  துயரொடு வாழல் காணாய்


கண்டுமே காண நிலையில்-வட
   கயவரின் வஞ்சக வலையில்
துண்டுமே தோளில் போட்டே-கட்சி
  தொண்டினை செய்வார் மட்டே
வேண்டியே சொல்லல் ஒன்றே-ஈழ
  வேதனை தீர்க்க இன்றே
துண்டினைத் தாண்டி வருவீர்-ஈழத்
  துயர்தனை நீக்கித் தருவீர்


தொப்புளின் உறவு அங்கே-இன்று
    துடித்திட நாளும் இங்கே
செப்பியும் பலன்தான் எங்கே-கேட்கா
   செவிதனில் உதிய சங்கே
துப்பிட எச்சில் கூட-சிங்கள
   துரோகிகள் அனுமதி நாட
தப்பினார் போரில் சிலரே-அவரும்
   தரமொடு வாழ்வார் இலரே



உலகிலா கேடி பக்சே-அவர்க்கு
   உதவிடும் இந்திய  கோட்சே
இலவுமே காத்த கிளியே-தவளை
   இனமொடு சேர்ந்த எலியே
புலருமே பொழுது ஒருநாள்-பார்
   புகழவே வருமே  திருநாள்
மலருமே தனியாய்  நாடே-ஈழம்
   மகழ்விலே திளைத்து ஆட

                                 
புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 19, 2011

அரசு எண்ணிட வேண்டும் கடமையென

தோளில் பையும் தொங்கிடவே-குப்பை
    தேடியே கண்கள் ஏங்கிடவே
காலில் செருப்பும் தேய்ந்திடவே-நடக்கும்
      கால்கள் அறியா ஓய்ந்திடவே
நாளும் வருவான் வீதியிலே-விரைந்து
     நடக்கவும் உடம்பில் சக்தியிலே
பாலின் கவரைக் கண்டாலே-உடன்
     பாய்ந்து எடுப்பதும் உண்டாமே

குப்பைக் தொட்டியில் குனிவானே-உள்ளே
   குத்திக்  அதனை  கிளர்வானே
தொப்பை நிறையும் வழியுண்டா-கண்டு
   துடிக்கும் கருணை விழியுண்டா
சப்பை உடம்பே பரிதாபம்-மனித
    சாதிக்கு இதுவே பெரும் சாபம்
உப்பை வாங்கவும் காசில்லைபசி
    உயிரை  வாட்டும் பெருந்தொல்லை


வீடுவீடாய் நாடிடு வான்-வெளியில்
   வீசிய குப்பையில் தேடிடுவான்
ஓடி வந்திடும் தெருநாயே-வீட்டின்
   உள்ளே குரைத்திடும் ஒருநாயே
ஆடும் உடலும் பயத்தாலே-ஆனால்
   அடங்கும் பசிமிகு வயத்தாலே
வாடும் நிலைதான் ஆயிடுமா-உடல்
   வற்றியே அவனுயிர் போயிடுமா

இப்படி வாழ்வார் பலபேரே-தலை
    எழுத்தெனச் சொல்வார் சிலபேரே
ஒப்புமா உள்ளம் நல்லோரே-நேர்மை
    உள்ளோர் ஏற்றுக் கொள்ளாரே
செப்பவும் இயலா கொடுமையிது-மேலும்
    செப்புவோர் காணின் மடமையது
எப்படி அவர்கள் வாழ்வதென-அரசு
    எண்ணிட வேண்டும் கடமையென

Monday, July 18, 2011

மும்பை நகரில் வெடிகுண்டே

ஏதும் அறியா அப்பாவிகளே-உயிரை
   இழந்தார் அந்தோ பாவிகளே
தீதும் உமக்கவர் செய்தாரா-பொல்லா
   தீவிர வாதிகள் சொல்வீரா
வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-மத
   வெறியரின் செயலால் மிஞ்சுவதே
நீதியில் கொடியோர் வளர்கின்றார்-தாம்
    நினைத்ததை நாளும் செய்கின்றார்
 
மும்பை நகரில் வெடிகுண்டே-தேடி
    மூன்று இடங்கள் அவர்கண்டே
வெம்பவும் மக்கள் வெடித்தாரே-தீயில்
    வெந்துமே  சிலரும் மடிந்தாரே
அம்பை எறிந்தவன் யாரென்றே-அரசு
     அறியும்  அந்த நாளென்றோ
தெம்பே இன்றி தினந்தோறும்-மக்கள்
    தெருவில் நடக்கவும் பயமேறும்

மதவெறி இதற்குக் காரணமா-இங்கே
   மனித உடல்கள் தோரணமா
உதவிடும் துரோகிகள் யாரிங்கே-நம்
   உளவுத் துறையும் போனதெங்கே
பதவி வகிப்போர் யாவருமே- பாடும்
   பல்லவி பலத்த கண்டணமே
கதறும் மக்களை தேற்றிடுமா-மன
   காயத்தை முற்றும் ஆற்றிடுமா

வெடித்திட வேண்டா குண்டுமினி-அரசு
    விரைவாய் வழிமுறை கண்டுமினி
தடுத்திடச் செய்வதே முதற்பணியாம்-செய்ய
    தவறின் தொற்றும் பெரும்பிணியாம்
அடுத்வர் சோற்றில் மண்அள்ளி-போடும்
   அரக்கரை வேருடன் நாமகிள்ளி
எடுத்திடும் வரையில் ஓயாதே-அரசு
    உரியன செய்யின் துயரேதே

Sunday, July 17, 2011

ஆடிப் பட்டம் தேடிவிதை

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்