Saturday, July 16, 2011

பழமொழிக் கவிதை

             மருமகள் உடைத்தால் பொன் குடமே-அதுவே
                மாமியார் உடைத்தால் மண் குடமே
             இருவருக் கிடையே வேற்று மையே-என்றும்
                ஏற்பட வந்ததாம் பழ மொழியே
             ஒருவர் விட்டுக் கொடுத் தாலே-வீட்டில்
                உலவும் அமைதி அத னாலே
             வருவோர் கண் டால் பாராட்டும்-அங்கே
                  வாரா  எண்ணு வீர்  போராட்டம்

             ஒத்துப் போவது உயர வென்றே-இருவர்
                   உணர்ந்தால் போதும் அது நன்றே
             சத்தாய் வளர்த் திடும் உள்ளத்தை-மேலும்
                   சாந்தமே திகழ்ந் திட இல்லத்தை
             வித்தே ஆகும ஒற்று மையே-எனில்
                   வேண்டா  மங்கே மற்ற வையே
            சித்தம் வைப்பீர் பெண் னினமே-என
                    செப்பிட செப்பிய தென் மனமே

                               புலவர் சா இராமாநுசம்

Friday, July 15, 2011

வெளிச்சம்...

வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 14, 2011

என் காதல் கவிதையும் நீயும்..

ஏடெடத்தேன் கவிஎழுத ஓடிவந்தாய்-அடி
என்னவளே எதற்காக ஊடிநின்றாய்
பாடிநான் முடிப்பதற்குள் வாடிப்போனாய்-என்
பாவுக்கு நீதானே பொருளா யானாய்
தேடியதைபோகாமல் சொற்கள் தாமே-என்னை
தேடியிங்கே வந்துவிட உடனேநாமே
கூடிமகிழ வருவாயா பெண்ணே-இன்பம்
கொள்ளையோ கொள்ளை கவிதைபெண்ணே

இனிமேலும் வேண்டாமே சண்டித்தனமே-நான்
என்றேனும் கோபித்த துண்டாதினமே
நனிமேலும் ஊடியே செல்லவேண்டாம்-அது
நன்மையா அல்லவே எண்ணிலீண்டாம்
கனிமேலும் கனிந்தாலே கெட்டேபோகும்-இது
கதையல்ல தொடர்பின்றி விலகலாகும்
பனிப்போரை நீக்கிவிட நீயும்பெண்ணே-உடன்
பறந்திங்கே வந்திடுவாய் கவிதைப்பெண்ணே

அதிகாலை உன்முகத்தை பார்த்துவிட்டே-என்
அடுத்தபணி அறிவாயா நெஞ்சைத்தொட்டே
புதுமாலை போன்றவளே புரிந்துமேனோ-நீ
புரியாத போல்நடித்தல் நியாம்தானோ
மதுமாலை வருமுன்னர் வருவாய்வீணே-நீ
வருகின்ற வழிபார்த்தே யிருப்பேனானே
இதுகாறும் கூறியதைக்கேட்ட பெண்ணே-உடன்
இனிதாக வந்திடுவாய் கவிதைபெண்ணே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 13, 2011

ஏமாற்றம்

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்

எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்

Tuesday, July 12, 2011

நண்பனே நண்பனே நண்பனே

             முன்னுரை

கண்ணாய் விளங்கும் நண்பர்களை
கவிதை நடையில் எழுதுமென
அண்ணா என்றே ஆணையிட்ட
அன்பு சோதரி இராஜேஷ்வரிக்கு
     நன்றி நன்றி நன்றி

  
நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
நவிலுதல் எனக்கே  அரிதாமே
பண்பொடு பழகினர் அவர்தாமே
பலரை விட்டால்  தவறாமே

ஆனால் சொல்ல ஆகாதே
அதனால் அவர்மனம் நோகாதே
நானாய் எடுத்த முடிவொன்றே
நன்கே ஆய்ந்து சரியென்றே

பள்ளி தொட்டு இன்றுவரை
பாசம் காட்டி பழகியுரை
அள்ளிக் கொட்ட அன்பாலே
அணைத்தான் அவனே பண்பாலே

சொல்லப் பெருமிதம் கொள்கின்றேன்
சொல்லின் அவன்பெயர் சதாசிவம்
எள்ளுள் இருக்கும் எண்ணையென
என்னுள் அவனது அன்பேசிவம்
          இன்று
கருத்தை அச்சில் தட்டுகிறேன்
கவிதையாய் வலையில் தீட்டுகிறேன்
திருத்த வேண்டின் திருத்துகிறேன்
தினமும் வலையில் பொருத்துகிறேன்
           அன்று
எழுதி அடித்து எழுதிடுவேன்
எடுத்து அதனை படித்திடுவான்
பழுதே இன்றி படியெடுத்து
படிக்க என்னிடம் கொடுத்திடுவான்
        அவனே
என்றும் எந்தன் உயிர்நண்பன்
எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
நன்றி மறவேன் என்நண்பா
நலமுற வாழ வாழ்த்துப்பா

தேக்கம் இன்றி கவிதைகளை
தெளிவாய் நானும் எழுதிடவே
ஊக்கம் தந்தது அவனன்றோ
உரமாய் இருந்தது அவனன்றோ

Monday, July 11, 2011

உயிரை இங்கே ஏன்விட்டாய்

எழுத கருத்துகள் வந்திடுதே-முதுகும்
    இயலா நிலமை தந்திடுதே
விழுதாய் தாங்கும் இருபெண்கள்-எனை
    விரும்பி காக்கும் இருகண்கள்
பழுதே இன்றி பெற்றேனே-பெரும்
   பயனே அவரால் உற்றேனே
தொழுவேன் நாளும் அவர்வாழ-தூய
   திருமலை தெய்வம் தாள்தாழ

பெற்றதே பெண்கள் என்றாலும்-நான்
    பெருமை  கொள்ளவே எந்நாளும்
கற்றதே கல்வி சிறப்பாக-தம்
   கடமை உணர்ந்து பொறுப்பாக
நற்றமி ழோடு ஆங்கிலமே-அவர்
   நன்கு கற்ற பாங்கிலுமே
உற்றனர் இன்று நல்வாழ்வே

என்னை விட்டுப் போனாலும்-என்
   இதயம் விட்டுப் போகாத
பொன்னின் மாற்று பொருளாக-ஐம்
    புலனாய் வாழ்ந்து அருளாக
தன்னை எனக்குத் தந்தவளே-நல்
    தாரமாய் வாழ வந்தவளே
உன்னை விட்டது ஒன்றேதான்-என்
   உயிரை வாட்டுது இன்றேதான்

போடி என்றே ஒருநாளும்-நான்
   புகன்ற துண்டா ஒருநாளும்
வாடி என்றே ஒருநாளும்-சொல்
    வழங்கிய  துண்டா ஒருநாளும்
தேடி நானும் அலைகின்றேன்-எட்டு
   திசையும் நோக்கி குலைகின்றேன்
ஓடி எங்கோ போய்விட்டாய்-என்
     உயிரை இங்கே ஏன்விட்டாய்

Sunday, July 10, 2011

படமும் பாடலும் - 2

அன்னை முகமெங்கே அவள்கரமா நீதூங்க
சின்ன மலரேயென் செந்தமிழே நானேங்க
உன்னை நான்பாட உவகை எனைநாட
பொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ
கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
மின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய்
என்னை மறந்தேநான் எழுதிடுவேன் எழுவாயா
இன்னல் தரமாட்டாய் ஏனென்றால் நீகுழந்தை

புலவர் சா இராமாநுசம்