எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
இதயம் விம்ம அழுதேனே
அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
அலறிய சேனலை நோக்கிலையா
விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
வெறியொடு எங்கும் திரிந்தானே
தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
துயரை நீக்கித் தருவாயா
நாதியும் அற்றுப் போனானே-தனக்கோர்
நாடும் அற்றுப் போனானே
பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
பெற்றால் உனக்கோர் திருநாளாம்
வீதி உலாவும் வருவாயே-எம்
வேண்டுதல் நடத்தி தருவாயே
நீதி இல்லா உலகமிது –துளியும்
நேர்மை யில்லா உலகமிது
உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
உனக்குமா கருணை விழியில்லை
பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
பொருளை நாங்கள் கேட்கவில்லை
அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
ஆண்டால் தானே வளம்சூழும்
மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
மண்ணில் உயிரை விடமாட்டோம்
எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
இருந்தும் என்ன பயன்கண்டோம்
சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
செய்வாய் அருள்வாய் விரைவாநீ
எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
இனவெறி மொழிவெறி கொடியர்களே
புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
போதனைக் ஏற்கும நாடில்லை
வருவாய் இறைவா வருவாயா-ஈழ
வளமையை மீண்டும் தருவாயா
திருவாய் திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
தீயோர் செய்தார் படுநாசம்
ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
ஓரம்தானே அவர் எல்லை
கருவாய் உருவாய் அழிந்தாரே-உலகம்
காணவும் கண்ணீர் பொழிந்தாரே
புலவர் சா இராமாநுசம்