Saturday, June 11, 2011

மறவாதீர் மரபுக் கவிதை

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
                    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
          இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
                  எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
          புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
                  புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
          அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
                  வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

              ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
                    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
          வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
                  வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
          இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
                எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
        திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
                தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்
                  எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
     கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
                கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
     விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்
                வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
      அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
            அழியாமல் காப்பதும் நமக்குள்ள பொறுப்பே

          மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
                மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
          விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
              வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே 
          பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
              பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
          அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
              ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை

                                                புலவர் சா இராமாநுசம் 

Friday, June 10, 2011

நீக்கிட வேண்டும் குறைசாடல்

நேற்றே எழுதினேன் ஒருபாடல்-உடன்
    நீக்கிட வேண்டும் குறைசாடல்
போற்றி வளர்ப்பீர் ஒற்றுமையே-நடந்து
    போனதைப் பேசல் வேற்றுமையே
சாற்றிட வேண்டுமா அதைமேலும்-வீண்
     சண்டைகள் தானே தினமூளும்
தோற்றவர் வென்றவர் வேண்டாவே-இதில்
    தோளொடு தோளென பூண்டாவே

 போதுமா? போட்டால்  தீர்மானம்-அறப்
     போரெனில் காக்க நம்மானம்
 மோதலே நம்மிடை எழுமாயின்-அதன்
     மேன்மை கெடவும் பழுதாமே
 ஏதுவாய் ஆகும் தமிழினமே-உலகம்
      எள்ளி நகைக்க வரும்தினமே
 ஆதியும அந்தமும் ஆயாமல்-கூடி
      ஆவன செய்வோம் ஓயாமல்


ஆறினால் கஞ்சியும் பழங்கஞ்சி-என
     ஆகும் நிலைக்கு நாமஞ்சி
வீரியம் கொண்டு எழவேண்டும்-ஈழம்
     விடுதலை உடனே பெறவேண்டும்
காரியம் முடியும் வரைநாமே-தினம்
     கண்துயிலும் நிலையை மறப்போமே
கூறினேன் மனதில் தோன்றியதை-கரம்
    குவித்து வேண்டினேன் செய்யுமிதை

              புலவர் சா இராமாநுசம்

Thursday, June 9, 2011

முதல்வருக்கு நன்றி மலர்

முத்துப் போன்ற தீர்மானம்-நம்
   முதல்வர் காத்தார் தன்மானம்
ஒத்துப் போக அனைவருமே-நல்
    ஒற்றுமை காட்டி தமிழினமே
சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ்
     சரித்திர முடிவு எடுத்தாரே
பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த
    பாட்டில் முழுவதும் நான்சொல்ல

அருளாதாரம்  அணு அளவும்-என்றும்
    அறியா பக்சே உள்ளளவும
பொருளாதார தடை ஒன்றே-சிங்களர்
     போக்கினில் மாற்றம் தருமென்றே
ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த
     ஒற்றுமை கெடவே பண்ணாதீர்
திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத்
    திசையும் தமிழினப் புகழ்பாடும்


ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை
    உடனே செய்தீர் இன்றாமே
குன்றே எதிரே மறித்தாலும-கை
    குறுக்கே குழியே பறித்தாலும
நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம்
    நிலைக்க ஆவன செய்வீரா
வென்றே வந்தீர் நீர்வாழ்க-ஈழம்
    வென்றிடும் வழிதனை நீர்சூழ்க

           புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 8, 2011

எனது ஊர்


எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

Monday, June 6, 2011

செய்தால் தமிழகம் பொங்கிஎழும்

         ஐநா அறிக்கை படித்தீரா-அடி
         வயிரும் எரிய துடித்தீரா
        பொய்யே இதுவரை வெறிநாயே-பக்சே
         புகன்றது முற்றும் அறிவாயே
        கையாய் உதவிய கல்மனமே-அந்த
         கயவனால் அழிய தமிழினமே
        செய்யாய் உதவி செய்யாதே-மேலும்
         செய்தால் தமிழகம் பொங்கிஎழும்

        ஒன்றும் அறியா அப்பாவி-பலர்
         உயிரைக் எடுத்தான் இப்பாவி
        இன்றே கட்டிவீர் கொடும்பாவி-தெருவில்
         இழுத்து புதைப்பீர் மண்தூவி
        கொன்றது நாற்பது ஆயிரமே-அறிக்கை
         கூறினும் மேலும்பல் ஆயிரமே
        தின்றதே அந்தக கழுகினமே-ஈழம்
         தேம்பத் தேம்ப பலதினமே

         எந்தக் கட்சியோ வேண்டாவே-தமிழ்
           இனமெனும் உணர்வே ஈண்டாவே
         சிந்தனை எதற்கு இனிமேலே-பாயும
         சிங்கமாய் எழவே இந்நாளே
         சொந்தமாய் ஈழம் அவர்காண-மன
         உறுதி கொள்வேம் பிறர்நாண
         நிந்தனை செய்யா எதிர்காலம்-உடன்
          நீக்குவோம் ஈழத்தின் அலங்கோலம்
  
           வேண்டாம் வேண்டாம் தமிழினமே-மேலும்
        வேடிக்கைப் பார்தால் உன்னினமே
           பூண்டோ டழிந்து போயிடுமே-அங்கே
        புல்லே முளைக்க ஆயிடுமே
           வேண்டும வேண்டும் தமிழினமே-ஈழ
        வெற்றிக்கு கொள்வோம் ஒருமனமே
           மீண்டும் மீண்டும் இதுஒன்றே-இன
        மேன்மையை உணர்த்தும் செயலின்றே

                      புலவர் சா இராமாநுசம்

என் தாய்மொழி


எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்