Saturday, May 28, 2011

எதையும் தாங்குவோம்


எதையும் தாங்குவோம்

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட

புலவர் சாஇராமாநுசம்

Friday, May 27, 2011

நீயா நானா

நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டோம இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளரந்து நாளும் களைகட்டும்

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும போகட்டும்

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல
இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
இருப்பது நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 26, 2011

தேசியம்

தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்ப்பென்னும தீநம்மை-சுற்றி


புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 25, 2011

வேங்கடவன் துதி



சூழும்  இடர்தன்னை  சுடர்கண்ட  பனியாக்கும்
     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்

அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ

பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்

வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே

தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா

வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்

மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான்  தொழுகின்றேன்

ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா

எங்கும்  உன்நாமம்  எதிலும்  உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ

அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே

 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா

 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்

 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்

  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம் 

  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
      ஒல்லும்  வழியெல்லாம்  உனைவணங்கச்  செய்திடுவாய் 

புலவர் சா. இராமாநும்

Sunday, May 22, 2011

தியாகம்

தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியியல் தனைநடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும துயருக் குண்டோஎல்லை

பெற்ற விடுதலை பறிபோகும-அதைப்
பேணிக் காக்கும நெறிகூறும
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால
மனதைமுடி மறைக் கன்றார்
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணாம் சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆடசியை அளியுங்கள்

புலவர் சா இராமாநுசம்