Tuesday, December 20, 2011

செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!



விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்
    சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
    ஏற்றயிடம் உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகைதனைச் செப்ப வேண்டும்!-மேலும்
    செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!

                                       புலவர் சா இராமாநுசம்

19 comments:

  1. அருமை கவிஞ்சரே!

    ReplyDelete
  2. //விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
    மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!//

    - அட வாங்க இளைஞரே!

    அருமையான வரிகள் அய்யா.

    தமிழ்மணம் வாக்கு 3.

    ReplyDelete
  3. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது தான், ஐயா!

    இளமை தங்கள் மனதிலும்
    எழுத்துக்களிலும்
    ஊஞ்சல் ஆடுகிறதே!

    மிக்க மகிழ்ச்சி, ஐயா!! vgk

    ReplyDelete
  4. மனசுக்கு வயதில்லை. துடிப்புடன் செயல்படுவீர்கள் நீங்கள். நல்லா வந்திருக்கு கவிதை

    ReplyDelete
  5. நிச்சயம் நாங்கள் உங்கள் வழி துணை நிற்போம்.
    நீங்கள் காட்டும் வழியில் பயணப்படுவோம்.
    உங்கள் ஆசியுடன்,ஆலோசனைகளுடன்.

    ReplyDelete
  6. அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  7. உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் அய்யா, நீங்கள் என்றைக்குமே வாலிபன்தான், உங்கள் சேவையை தொடருங்கள் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்...!!!

    ReplyDelete
  8. தொடருங்கள் ஐயா:)

    ReplyDelete
  9. உடல்நிலை சரியில்லாதபோதும் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வின்றி எந்நேரமும் பொதுநலச் சிந்தனையே உமக்கு. வழிகாட்ட நீவிர் இருக்க வழிமாறுமோ எங்கள் தடம்? யாவும் நலமாய் நிறைவேற வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  10. நல்ல கவிதை.
    மனந்தளராதீர்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உங்கள் இளம் மனதின் துடிப்பை வெளிப்படுத்தும் கவிதை அருமை ஐயா

    த.ம 9

    ReplyDelete
  12. நம்பிக்கையோடு உற்சாகமாகவும் இருங்கள் ஐயா !

    ReplyDelete
  13. உடலின் உறுப்பு ஒவ்வொன்றும் தன் இருப்பை ஓங்கிப் பறை சாற்ற உயர் எண்ணங்களால் அவற்றை ஒதுக்கித் தள்ளி நீங்கள் தெம்புடன் எடுத்த பணி தொடர என்றும் இறைவனை இறைஞ்சுகிறேன். வாழ்க வளமுடன்.

    ReplyDelete