Monday, December 12, 2011

எழுவாய்த் தமிழா எழுவாயா...?


எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்


 

17 comments :

  1. kavidhai arumayaga ulladhu nandri
    thiru pulavar sa.eramanusam avargale
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. ஆம் புலவரே... ஏக இந்தியா உடைபட்டு விடுமோ என்பதுதான் என் கவலையும்! ஆயின் மனித மனங்கள் குறுகிவிட்ட இக்காலத்தில் தமிழன் ரெளத்திரம் பழகத்தான் வேண்டும் எனும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. உங்களின் கவிதை எழுப்பும் உணர்வுகளை வெளிப்படுத்த என் வார்த்தைகளுக்கு வலு போதவி்ல்லை! அருமை ஐயா!

    ReplyDelete
  3. சரியா சொன்னீங்க .
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விழித்தெழு தமிழா.
    வீறுகொள்..
    நம்மிடம் வாங்கித்தின்று நம் வாயிலே
    மண்ணைப்போட நினைப்பவரின்
    எண்ணத்திலே மண்ணைப் போடுவோம்.

    அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  5. சரியாகச்சொன்னீங்க பாஸ் அருமை

    ReplyDelete
  6. அருமையாக உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் வரிகள்...!!!

    ReplyDelete
  7. அருமையான வரிகள் ஐயா!
    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. சரியாய்ச் சொன்னீர்கள் புலவரே..உதிரிப் பூக்கள் போல்தான் இங்கே கட்சிகள் உள்ளன.

    ReplyDelete
  9. நல்லா சொல்லிருக்கீங்க ஐயா

    ReplyDelete
  10. இலங்கை அரசால் மீனவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு இதில் வேடிக்கை பார்ப்பது ஒன்றும் புதிது இல்லை ((மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா?))

    ReplyDelete
  11. சரியா சொன்னீங்க .((மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா?))

    ReplyDelete
  12. பொதுவாக, சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் சட்டங்கள் செய்வோர் ‘மழை’ பெய்தாற்போல இருக்கும் பொழுது மக்கள் பொறுமை இழந்து விடுகிறார்கள். அது ‘காவிரியோ’ இல்லை ‘முல்லைப் பெரியாரோ’ மத்திய அரசு ‘நபும்ஸகர்கள்’ போல இருப்பது விந்தை!

    மன்மோகன் எந்த நாட்டிற்கு பிரதமராக இருக்கிறார் என விளங்கவில்லை! தாங்கள் ஒத்துக் கொள்கிறீகளோ இல்லையோ எனக்குத் தெரியாது. இது சம்பந்தமான எனது கருத்து இங்கே:

    http://orbekv.blogspot.com/2011/11/blog-post_30.html


    அன்புடன்
    இரா. பலராமன்

    ReplyDelete
  13. //எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக//

    நம்மவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம்,நன்று

    ReplyDelete
  14. தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
    //

    எத்தனை நாள் துணை புரிவாரென்று தெரியவில்லை!

    ReplyDelete
  15. இந்தக் கோவம்தான் தேவை ஐயா !

    ReplyDelete
  16. அருமையாக சொல்லியிருக்கீங்க புலவரே..!
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...