Thursday, November 24, 2011

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை



மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
    எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
    புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
    வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
    வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
    எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
    தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்
    எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
    கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்
    வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
    அழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே

மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
    மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
    வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே 
பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
    பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை
                        
                                    புலவர் சா இராமாநுசம் 

30 comments :

  1. மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை. மரப்புன்னா என்ன சார்? புரியலையே...

    ReplyDelete
  2. மரபுக்கவிதையின் தரம் உயர்ந்தது. உங்கள் ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete
  3. அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை//
    அருமையான வரிகள்... நல்ல கவிதை புலவரே...

    ReplyDelete
  4. நன்கு பயிற்சி பெற்றவர் மிக எளிதாக
    அழகாக சிலம்பம் சுற்றுவதுவதுபோல்
    நீங்கள் சுற்றிவிடுகிறீர்கள்
    நாங்கள் இப்போதுதான் தடியையே
    கையில் பிடிக்கிறோம்
    அதுதான் வித்தியாசம்
    அருமையான படைப்பு
    த.ம 2

    ReplyDelete
  5. யாரை சாடுகிறீர்கள் என்று புரியவில்லை...

    ReplyDelete
  6. ஐயா சற்று புரியாமல் உள்ளது. எனக்கு அம்புட்டு தான் போல....

    ReplyDelete
  7. எனக்கு மரபுக் கவிதையெல்லாம் வராது!

    ReplyDelete
  8. கணேஷ் said

    அன்பரே தங்கள் கேள்விக்கு விரிவான விடை
    எழுத வேண்டும் அதை இப்பகுதியில் முழுவதுமாய்
    எழுத இயலாது
    சுருக்கமாக, செய்யுள் இலக்கணத்தை ஒட்டி
    முன்னோர் எழுதி உள்ளதைப் போல‍,அவர் வழி(மரபு)
    பின் பற்றி எழுதுதல் ஆகும்
    இதையே வேண்டுகோளாக இக் கவிதையில்
    எழதியுள்ளேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வலிபோக்கன் said..

    நன்றி!அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. ஷைலஜா said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. ரெவெரி said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. உண்மைதான் அய்யா! மரபு எளிதில் மனதில் தங்கி நீண்ட காலம் இருக்குமென்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  13. Ramani said.

    சகோ!
    தாங்கள் என்னை விட தடியை
    வேகமாச் சற்றுவீர்கள் சுற்றமுடியும் நான் நன்கு
    அறிவேன்!
    ஆனால், வித்தியாசமாக தாங்கள் எடுத்துக் கொண்ட தாகத் தெரிகிறது.
    இக் கவிதை ஓராண்டுக்கு முன்பே எழுதியது
    யாரையும் சுட்டிக் காட்ட எழுதப்பட்டதல்ல
    எவ்வகையிலேனும் தங்கள் மனம் காயப்பட்டிருக்கு மானால் என் ஆழ்ந்த வருத்தத்தை
    தெரிவித்துக் கொள்கிறேன்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. suryajeeva said.

    நான் யாரையும் சாடவில்லை
    மரபுக் கவிதைகள் நாளும் அருகி வரும் நிலை
    கண்டு ஏற்பட்ட ஆதங்கத்தில், அதுவும் ஓராண்டுக்கு
    முன் எழுதியது!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தமிழ்வாசி பிரகாஷ் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. shanmugavel said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மரபுகள் அருகி மருகி வரும் இவ்வேளையில்
    அதற்கான எழுப்புதலாகவும் அதற்கான தூண்டுதலாகவும் அமைந்திருக்கும் கவி அருமை புலவரே..

    ReplyDelete
  19. அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
    அழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே
    ஆமாம் ஐயா!
    நாங்களெல்லாம் இன்னும் நன்கு பயில வேண்டும்.


    /
    அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை
    /
    அறுகி வருகிறதென்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது.
    முயற்சிப்போம் ஐயா!

    ReplyDelete
  20. ஐயா நீங்கள் தமிழை கரைத்துக்குடித்தவர். உங்கள் கவிதைகளில் கவியாப்பிலக்கணம் பிறளாமல் வார்த்தைகள் அழகு நர்த்தனமாடும். ஆனால் இங்கு கவிபடைக்கும் பலரும் எவரோ எழுதிய கவிதைகளில் மயங்கி ஒரு ஏகலைவனைப்போல சுயமாக மெதுவாக தவண்டு எழுந்துநின்று நடைப்பயில முனைப்வர்கள். அவர்களுக்கு உங்களைப்போன்றவர்கள்தான் ஆசான்களாக இருந்து வழிகாட்டவேண்டும்.

    ReplyDelete
  21. அழகான மரபுக்கவிதைகள் மூலம் தாங்கள் புரியும் தமிழ்த்தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. தமிழையும் தமிழினத்தையும் இரு கண்களாய்ப் போற்றும் தங்கள் ஆதங்கம் நியாயமானதே என்றாலும் தமிழை முறையாகப் படித்தோரன்றி மற்றவர்கள் மரபுக்கவிதை எழுதுதல் சாத்தியமல்லவே. பெரும் ஊக்கத்தோடு கற்றுக்கொண்டால் முடியும் என்றாலும் இங்கே பலருக்கும் தமிழைப் பிழையின்றிப் பேசுதலும் எழுதுதலுமே பிரச்சனை என்பதால் அதைத் திருத்த முன்னுரிமை கொடுக்கலாம் என்பது என் கருத்து. தவறெனில் பொறுத்தருளவும்.

    ReplyDelete
  22. உண்மையில் மரபுக் கவிதைக்கான லாவகம்
    கைகூடிவருவது அவ்வளவு எளிதான விஷயமில்லை
    தொடர் பயிற்சியும் முயற்சியும் அவசியம் வேண்டும்
    அதற்கான சூழலும் நேரமும் தற்போது
    பொருளாதரத் தேவைகளுக்காக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு
    இல்லை அதைவருத்தப்படுகிற விஷய்மாகத்தான் நானும்
    கருதுகிறேன்.என் கருத்து மிகச் சரியாக சொல்லப் படவில்லையோ
    என வருந்துகிறேன்
    தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
  23. Ramani said

    அன்பின் இனிய சகோ!இரமணி!
    தாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை! செய்தவன் நான் தான்!எனவேதான் மனங்கசிய மன்னிப்பு என்ற
    பொருளில் வருந்துகிறேன் என்று தெரிவித்தேன்
    என்னைத் தவறாக நினைக்கவில்லை என அறிந்து, மகிழ்வோடு மீண்டும் தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
    மேலும்
    என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று உள்ள
    அனைத்து வலையுலக அன்பு உள்ளங்களுக்கும்
    என் தாழ்மையான வேண்டுகோள்!
    இக் கவிதையானது யாரையும் புண் படுத்தும்
    நோக்கில் எழுதப்பட்டதல்ல!
    மரபுக் கவிதைகள் அருகி வருவது கண்டு
    வருந்தி ஏற்பட்ட ஆதங்கதில் வந்ததே ஆகும்!
    அதுவும் ஓராண்டு முன்பாக நான் எழுதியது
    தற்போது இக் கவிதை உங்களில் யாரையேனும் புண்
    படித்தி இருந்தால் தலை தாழ்த்தி மன்னிக்க வேண்டுகிறேன்
    அன்புள்ள
    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. உண்மையான ஆதங்கம் ஐயா...

    ReplyDelete
  25. நிச்சயம் ஐயா ..
    நாங்கள் மரபில் கவிதை வடிக்க முயற்சி செய்வோம் ..
    அனால் தங்களுக்கு அது
    எளிதாக அமைகிறது ..
    நாங்கள் இனிமேல் தான் அதை
    கற்றுக்கொண்டு எழுத வேண்டும்

    ReplyDelete
  26. அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
    அழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே

    தமிழின் இனிமை என்றும் அழியாது..

    ReplyDelete
  27. நெஞ்சைக் கலக்கிய வரிகள் இவை. தமிழைத் தழுவியவருக்கே பிரிவின் வலி புரியும். மிக நன்று/ நன்றி ஐயா.
    //இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
    எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
    திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
    தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...