Sunday, September 11, 2011

அவளும் நானும்


 நேற்று  அன்பர் வேடந்தாங்கல் கருன் அவர்கள்
 எழுப்பிய ஐயத்திற்கு விடையே இக் கவிதை
 ஆகும்.! நன்றி!
                    

காதலித்தே ஆண்டுபல காத்துத் தானே-நாம்
  கைபிடித்து மணமுடித்தோம் அறிந்தும் வீணே
சாதலிலே மட்டும்நீ முந்திக் கொண்டாய்-அது
  சரிதானா என்னிடத்து  குறையென்   கண்டாய்
பேதலித்து இரவுதினம் அழவும் இங்கே-என்னைப்
  பிரியமனம் வைத்தவளே சென்றாய் எங்கே
மாதர்குல மாமணியே செய்தாய் வஞ்சம்-நீ
  மறந்தாயா பறந்தாயே பதற நெஞ்சம்

ஊரெல்லாம் நமைப்பற்றி தூற்றும் போதும்-நம்
  உறுதிதனை அறிந்துப்பின் போற்றும் போதும்
யாரெல்லாம் எதிர்த்தாரோ உறவில் அன்றே-பின்னர்
  யாதொன்றும் கூறாமல் விரும்பி நின்றே
சீரெல்லாம் தந்ததுடன் வாழ்த்திச் சென்றார்-ஆனால்
  சிலர்மட்டும் புழுங்கிமனம் ஒதிங்கி நின்றார்
வேரற்ற மரமானேன் அந்தோ வீழ்வேன்-காதல்
  விளையாட்டா நீயின்றி எவ்வண் வாழ்வேன்

பட்டணத்தில் நீபடித்துப் பட்டம் பெற்றாய்-ஏன்
  பட்டிகாட்டான் என்மீது காதல் உற்றாய்
மட்டமென ஒருநாளும் இறுதி வரையில்-என்னை
  மனத்தாலும் எள்ளவும் எண்ணா நிலையில்
திட்டமிட்டா எனைவிட்டு விலகிச் சென்றாய்-செல்லும்
  திசையறியா மாலுமியாய் திகைக்க நன்றாய்
வட்டமிட வல்லூறு அஞ்சும் பறவை -என
  வாழ்கின்றேன் அறிவாயா நமது உறவை

வாழ்வதுவும் வீழ்வதுவும் என்றும் ஒன்றாய் -எதிர்
  வரலாறு நமைப்பற்றி சொல்லும் என்றாய்
தாழ்வதிலே வந்ததடி நியாயம் தானா-ஆ
  தாரமென நினைத்தேனே அனைத்தும் வீணா
ஏழ்பிறவி  என்பதுவும் உண்மை யானால்-அடி
  என்னவளே எனதுணைவி நீயே ஆனால்
ஊழ்வென்ன செய்யுமடி தோற்றே போகும்-காதல்
  உண்மையென  இவ்வுலகே சாற்ற லாகும்
 
மருத்துவத்தில் மகளிர்கென பெற்றாய் பட்டம்-நான்
  மாத்தமிழில் புலவரென பெற்றேன் பட்டம்
பொருத்தமுண்டா எனப்பலரும் கேட்ட போதும்-நீ
  பொறுமைமிக சிரித்ததெந்தன் நெஞ்சில் மோதும்
திருத்தமுற இறுதிவரை ஊரும் மெச்ச-வாழ்க்கைத்
  தேரோட எதற்காகத் தேரின் அச்சே
வருத்தமுற முறித்தாயே நியாயம் தானா-கேள்வி
  வாட்டுதடி வழியறியேன் வாழல் வீணா

கலப்புமணம் காதலொடு செய்து கொண்டோம்-இரண்டு
  கண்ணெனவே பெண்மகளீர் பெற்றுக் கொண்டோம்
சலசலப்பு பலவந்தும் துவண்டா போனோம்-காலம்
  கடந்தாலும் காத்திருந்தே ஒன்றாய் ஆனோம்
இலைமறைவு காயான சொந்தம் கூட- நீ
  இல்லையென ஆனதுமே விலகி ஓட
வலையுலகு நெஞ்சங்களே துணையாய் ஆக-இன்று
  வாழ்கின்றேன் தனிமையெனும் துயரம் போக

52 comments:

  1. உங்களுக்குள் இத்தனை மனவேதனையா....!!!!
    வருந்தாதீர்கள் ஐயா வலைத்தள உறவுகள்
    நாமும் உங்கள் உறவுகள்தான் .எத்தனை
    அழகிய சிந்தனை தங்கள் மனைவிமீதுகொண்ட
    அன்பின் வெளிப்பாட்டை அழகிய கவிதை வரிகளால்
    எம் நெஞ்சை நெகிழும்வகையில் தந்தீர்கள்
    உங்கள் உணர்வின்முன் தலைவணங்கி உங்கள்
    மக்கள்போல் இங்கு நானும் உங்களை ஆளும்
    இந்த மனவலி தீர பிரார்த்திக்கின்றேன் .வருந்தாதீர்கள்...வருந்தாதீர்கள் ஐயா ...........

    ReplyDelete
  2. வலிமிக்க கவிதை புலவரே, கலங்காதீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் துணையாக...

    ReplyDelete
  3. உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம். கலங்காதீர்கள்

    ReplyDelete
  4. வலையுலகு நெஞ்சங்களே துணையாய் ஆக-இன்று
    வாழ்கின்றேன் தனிமையெனும் துயரம் போக

    கண்ணீர் தரும் வரிகள் உங்கள் வாழ்கையே கவிதையாய்

    வருந்தாதீர் உங்கள் பிள்ளைகள் வலையுலகில் துணையாக இருப்போம்

    ReplyDelete
  5. தங்கள் படைப்பினில் வரிகளை மீறித்தெரியும்
    மனித நேயமும் அன்பும் பண்பும்
    பின்னூட்டங்களில் காணும் அரவணைப்பும்
    தாங்கள் வலையுல உறவின் பால் கொண்ட
    அதிக பட்ச அன்பை மிகத் தெளிவாக
    சொல்லிப் போகும்
    இக்கவிதையைப் படிக்க மனம் மிகக்கலங்கிப் போனது.
    வலியுலக உறவுகளும் காலமும்
    நிச்சயம் உங்கள் கவலைகளை தீர்க்கும் அரிய மருந்தாக உதவும்
    த.ம 6

    ReplyDelete
  6. வருந்தாதீர் ஐயா
    வடுக்களை மறவீரே
    உம்மிரு பெண்களோடு
    ஆண்மகவாம்
    எம்மையும் சேர்த்து
    மூன்றெனக் கொள்ளும்
    தூரத்தில் இருந்தாலும்
    தூண்டா மணிவிளக்காய்
    கண்ணீரைத் துடைத்திடுவேன்
    கலக்கம் வேண்டாம் ஐயா
    என்னுடன் பிறந்தோனும்
    மனைவியை இழந்தானே
    முப்பது வயதினிலே
    ஆண்டுகள் பனிரெண்டாசு
    வைச்ச அன்பு மாறாமல்
    மறுமணம் கொள்ளலியே
    இழப்பின் தன்மையை அறிவேன் ஐயா
    ஈடு இணையில்லா
    பன்மகவாம்
    கவிகள் புனைபவரே
    அத்தனையும் உன்மகவே
    படைக்கப் பிறந்தவர் நீர்
    இழப்பை நினைத்து வருந்தாதீர்.

    ஆறுதல் சொல்லினாலும்
    ஆழ்மனது கலங்குதய்யா

    ReplyDelete
  7. ஏழ்பிறவி என்பதுவும் உண்மை யானால்-அடி
    என்னவளே எனதுணைவி நீயே ஆனால்
    ஊழ்வென்ன செய்யுமடி தோற்றே போகும்-காதல்
    உண்மையென இவ்வுலகே சாற்ற லாகும்

    உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.

    ReplyDelete
  8. வணக்கமையா இன்றய கவிதை உங்கள் வாழ்க்கை புத்தகத்தை   திறந்து எங்களுக்கு படிக்க தந்தீர்கள்.. உங்களை உறவுகள் புறக்கணித்தால் என்னையா நாங்கள் உங்கள் உறவுகள்தானே... இபோது பாருங்கள் எவ்வளவு உறவுகள் உங்கள் வீட்டில்.. எங்களை சமாளிக்க முடியாமல் நீங்கள் இப்போது திணறுவீர்களே..?? ஒரு நாளில் 24 மணிநேரமே போதவில்லை உங்களுக்கு இப்போது... நாங்கள் இருக்கிறோமையா கவலை விடுங்களய்யா...

    ReplyDelete
  9. கலங்காதீர் என்று கொன்னாலது
    கழிவிரக்கம்!..வீரமான கவசமாயொரு
    கலம் ஒன்றும்மிடம் உண்டு.
    கன்னித்தமிழ்!. அவள் தரும்
    களிப்பு எவள் தருவாளய்யா!
    இது உம் நேரம் கொல்லும்!
    எனக்கது தெரியும். நானடையும்
    மகிழ்வும் எல்லையற்றது. அவளால்.
    அருமை! வாழ்த்துகள் ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. நெஞ்சைத் தொடும் கவிதைவழி - மனைவி
    நினைவில் வாடும் வாழ்வதனை
    கொஞ்சம்சொல்லி கனக்க வைத்தீர் - மனதைக்
    கொள்ளை கொண்டதந்த நல்கவிதை.

    ReplyDelete
  11. கலங்க வைத்துவிடீர்கள் அய்யா உங்கள் கவிதையால்.
    உங்களுக்குள் இவ்ளோ வலியா?? நினைக்கவே
    மனசு நோகுது......... கவலையை விடுங்கள் அய்யா
    வலையுலக நண்பர்கள் நாங்கள் இருக்கிறோமே....

    உங்கள் மாணவி மீதி நீங்கள் வைத்து இருக்கும்
    பாசம் நெகிழ்ந்து கண் கலங்க வைத்துவிட்டது.

    ReplyDelete
  12. இணையில்லாது வாழும் வாழ்க்கை எத்தனை கொடுமை என்பதை இதோ இன்னொரு உயிர் இங்கே தவித்துக்கொண்டிருப்பதை வரிகள் மூலம் அறிகிறேன்..

    என்ன சொல்லி தேற்றுவேன்? என்ன சொன்னாலும் அன்பின் காதல் மனது திரும்ப வந்துவிடும் என்றால் இதோ பலமுறை சொல்லி சொல்லி வேண்டுகிறேன்.. உற்றத்துணை நீ விட்டு வந்த குழந்தை ஒன்று சொல்லமுடியா வேதனையுடன் தத்தளிக்கிறது...

    தனிமையின் கொடுமை சொல்லி செல்கிறது ஐயா வரிகள்....
    எத்தனை சுகம் எத்தனை சொந்தம் எத்தனை பணம் இருந்து என்ன? நேசித்த உயிர் அருகே இல்லையெனில் வாழ்வது வீண் என்று நீங்க சொல்வதை நான் ஏற்கிறேன் ஐயா....

    உங்க கல்யாணம் காதல் கல்யாணமா ஐயா? அந்த காலத்தில் காதல் என்றால் எத்தனை போராட்டம் இருந்திருக்கும்னு என்னால ஊகிக்க முடிகிறது... சொந்தங்கள் எல்லாம் காதலை முறிக்க நினைத்தும் தெய்வத்தின் கருணையினால் நேசித்த உள்ளங்கள் இணைந்து திருமண பந்தத்தில் திளைத்து முத்தாய் நல்ல குழந்தைகளைப்பெற்று பொறுப்புகள் முடிந்ததுன்னு சேர்ந்துட்டாங்க....

    ஆனா அவங்க இல்லாம இந்த உலகில் உங்களுக்கு வாழ தெரியலைன்னு அவங்க உணரலையே :(

    உங்க சோகம் எல்லாமே க்‌ஷணத்தில் துடைக்கும் சக்தி இதோ இந்த இணையம் மூலம் பெற்ற அன்பு நட்புக்கு மட்டுமே உண்டுன்னு அழுத்தமா சொல்லிட்டீங்க ஐயா...

    காதலை சொல்லும்போது அந்த காலத்துக்கே நீங்க போய் வந்ததை வரிகள் சொன்னது ஐயா...

    காதலை வென்று பந்தத்தில் இணைந்தபோது உங்கள் அருகே உங்க இணையும் இருந்ததை உங்க வரிகள் உணர்த்துகிறது ஐயா...

    வாழ்க்கையிலும் வென்றதை சொன்னபோது உங்கள் புன்னகை முகம் என்னால் மகிழ்வுடன் பார்க்க முடிகிறது ஐயா....

    நேசித்த உள்ளம் விட்டு போன தனிமை என்னை கொல்லாமல் காப்பது இதோ இந்த நட்பு வட்டம் தான் என்று கம்பீரமாக சொல்லும்போது...

    நானு நானு நானு... அப்டின்னு இந்த அன்பு நட்பு வட்டத்துக்குள் என்னையும் இணைத்துக்கொள்ள குட்டியூண்டு இடம் தாங்கன்னு கேட்க தோன்றுகிறது ஐயா....

    அழவைக்க முயற்சித்து அழவெச்சிட்டீங்க போங்க என்னை...

    இறையருளால் நீங்க இருக்கும் காலம் வரை ஆரோக்கியமாக இருக்கணும் ஐயா.. இது தான் என் வேண்டுதல் இறைவனிடத்து....

    என்னவோ தெரியலை உங்கள் கவிதையை இன்று படித்தபின் சட்டுனு நான் வயசானா என்னாகும் எப்படி இருக்கும் வாழ்க்கையின்னு நினைக்க தோன்றிவிட்டதுப்பா...

    அன்பு நன்றிகள் ஐயா... உங்கள் வாழ்க்கையை, உங்கள் நேசத்தை, உங்கள் நம்பிக்கை எங்களுடனான கொண்ட நட்பை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  13. அம்பாளடியாள் said

    நன்றி மகளே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. கவி அழகன் said...

    நன்றி தம்பீ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. Ramani said...


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. மகேந்திரன் said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. Rathnavel said...

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. காட்டான் said...


    நன்றி காட்டான்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. kovaikkavi said...


    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. கலாநேசன் said


    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. துஷ்யந்தன் said...


    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மஞ்சுபாஷிணி said...


    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. //வாழ்வதுவும் வீழ்வதுவும் என்றும் ஒன்றாய் -எதிர்
    வரலாறு நமைப்பற்றி சொல்லும் என்றாய்//

    அருமையான கவிதை ஐயா,, உங்கள் வாழ்க்கையை அப்படியே கவியாக வடித்துள்ளீர்கள்.

    வலையுலகம் எப்போதும் துனையாக இருக்கும்,

    ReplyDelete
  27. வலி மிகுந்த கவிதை.... உங்கள் வாழ்வின் கவிதை....

    கவலை கொள்ளேல்.... துணையிருக்க நிறைய பேர் இருக்கிறோம் இங்கே...

    ReplyDelete
  28. Riyas said...


    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. வெங்கட் நாகராஜ் said...


    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. ஐயா வாழ்கை என்பது இப்படித்தான் என்று உணர வைத்துள்ளீர்கள்....

    ReplyDelete
  31. அருமையான வரிகள்

    ReplyDelete
  32. கனத்த மனத்தின் வேதனையையும் கவியால் சொன்ன கலங்கா நெஞ்சமே, வாழிய நீவிர். அன்னைத் தமிழோடு அன்புப் பிள்ளைகள் நாங்களும் என்றும் உம்முடன் இணைந்திருப்போம்.

    ReplyDelete
  33. ஐயா, திரும்பத் திரும்ப அந்தக் கவிதையை படித்துக்கொண்டே இருக்கின்றேன்..

    அன்பான உறவின் பிரிவு தரும் துயர் கொடுமையானது. நண்பர்கள் சொன்னது போல், நாங்கள் உண்டு உறவுகளாய்!

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா,
    முதலில் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

    ReplyDelete
  35. ஊரை எதிர்த்துத் திருமணம் செய்து,
    உறுதியுடன் வாழ்ந்த உங்கள் காதல் வாழ்வில்,

    காலன் சதி செய்து விட, இன்று தனிமையில் வாழும் உங்களின் கடந்த காலங்களை கவி நடையில் தந்து,
    கண்களிர் நீர் சொரிய வைத்து,
    வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் எனும் தத்துவத்தை- வாழ்வியலை மீண்டும் சொல்லியிருக்கிறீங்க ஐயா.

    ReplyDelete
  36. படபடக்கும் நெஞ்சமதை பார்கின்றேன் - புலவர்
    பாட்டில் உள்ள காதலதை உணர்கின்றேன்
    உயிரெனவே உருகுகின்றார் தன் உயிருக்கு
    உயிரான காதல் வாழ்வை உலகிற்கு
    உரைத்ததனால்தம் உள்ளமும் நிறைகின்றார் - புலவர்
    உதிர்க்கும் கவிதனை உள்ளம்பூரித்தே கேட்கின்றோம்
    உண்மைக் காதலும் இதுவல்லவோ என்றே
    உண்மை விளங்கவேப் பெறுகின்றோம்.

    தங்களின் வாழ்வும் கவிபோலே இனிமையானது என்பதை அறியும் போது உள்ளம் நிறைகிறது. உங்களின் இதயத்திலே வாழும் உங்கள் காதலான மனைவியும் உங்களுக்காகவே உங்கள் உள்ளத்திலேக் காத்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  37. ஆகுலன் said

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. புங்கையூர் பூவதி said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. கீதா said...

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. செங்கோவி said

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. நிரூபன் said...


    தவறல்ல சகோ! கவலற்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. நிரூபன் said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  43. தமிழ் விரும்பி said...


    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. கவிதை நல்லாயிருக்கு...உங்கள் வாழ்க்கையை அப்படியே கவியாக வடித்துள்ளீர்கள்...புலவரே...
    ரெவெரி

    ReplyDelete
  45. ஐயா (எப்பொருள் வேண்டுமானாலும் கொள்ளுங்கள்),


    எனது கருத்தை எழுத்துக்களால் சொல்லிட முடியுமா?

    50 வருடங்களுக்கு முன்பே கலப்பு, காதல் , திருமணம்...வியப்பே மேலோங்குகிறது.!

    நாங்களும் உறவுகளே!

    ReplyDelete
  46. id said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  47. மனம் நெகிழவைத்த கவிதை.

    உங்கள் துயரம் துடைக்கத் தமிழே மருந்தாகட்டும்.

    ReplyDelete
  48. சத்ரியன் said...

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..!
    சரியா!

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  49. சுந்தரா said...

    முதல் வருகை
    வணக்கம்!
    வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  50. காலமெல்லாம்
    காதல்
    காத்துக் கொண்டிருக்கிறது

    வாழ்க்கை
    தனித்தில்லை என்பதால்
    காலதாமதம்


    எந்த நொடியும்
    எதையும் ஞாபகபடுத்த
    எத்தனையோ நிகழ்வுகள்

    இல்லாது போனாளென்று
    ஏனைய்யா வருத்தம்
    என்றுமவர் உமது இல்லாள்

    ReplyDelete
  51. வலையுலகு நெஞ்சங்களே துணையாய் ஆக-இன்று
    வாழ்கின்றேன் தனிமையெனும் துயரம் போக

    இந்த மனோதிடம் உங்களுக்கு என்றும் அரணாக..

    ReplyDelete