Wednesday, August 10, 2011

ஓடி உதைத்து விளையாடு…

ஓடி உதைத்து விளையாடு-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மை
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே
முயற்சி ஒன்றே திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சி கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே

ஒவ்வொர் நாளும் விளையாடு-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழி போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண

10 comments:

  1. ஒவ்வொர் நாளும் விளையாடு-பழுது
    உரிமைக்கு வந்தால் போராடு
    எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
    ஏய்க வந்தால் நீசாடு


    ..... புதிய ஆத்திச்சூடி. அருமை.

    ReplyDelete
  2. கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
    கொள்கையைக் காக்க தயங்காதே//


    மைதானவிளையாட்டு குறிித்து சொல்வதாக
    காட்டிக்கொண்டு
    வாழ்க்கை விளையாட்டு குறித்துச் சொல்லும்
    அற்புதக் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று கவிதையின் கருத்து அருமை ஐயா..
    அழகான பொருள் நிறைந்த கவிதை..
    பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. //கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
    கொள்கையைக் காக்க தயங்காதே //

    கோடிக்களுக்கு மயங்காத மனமும் உண்டோ

    ReplyDelete
  5. நல்ல கவிதை,நல்ல அறிவுரைகள் ஐயா ...நன்றி நன்றி

    ReplyDelete
  6. பிள்ளைகளுக்கு வேண்டிய நல்லொழுக்கங்களை மிக அருமையாக நேர்த்தியாக வரிகள் அமைத்து கூறும் நல்லுரையாக அமைந்தது சிறப்பு ஐயா....

    இப்படியே எல்லா குழந்தைகளும் சிறுவயதில் இருந்து கற்று வளர்ந்தால் அரசியல் கூட தூய்மை பெற்றுவிடும் என்பது உறுதி....

    அன்பு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  7. ஓடி உதைத்து விளையாடு என்று புதுமை வரிகளை புகுத்தி அசத்தியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. நவீன ஓடி விளையாடு...அற்புதக் கவிதை

    ReplyDelete
  9. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி!

    தனித்தனி தெரிவிக்க இயலாத உடல் நிலை!
    மன்னிக்க!

    புரவர் சா இராமாநுசம்

    ReplyDelete