Wednesday, August 24, 2011

எண்ணிப் பாரும் நல்லோரே

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
     இதயம் படைத்த பல்லோரே
 கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
     காகித பிளாஸ்டிக் குப்பைகளே
 விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
     விரைவாய் முகத்தில் மோதிடுமே
 திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
     தெருவில் போடவும் தடுப்பீரா

வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
      வீதியில் குப்பையைத் தேக்குவதும்
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
      கேட்பின் அவரைச்  சாடுவதோ
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
     நோய்கள் பிறக்கும் தாயன்றோ
கோட்டையை  ஆள்வோர் மட்டுமே-இக்
     கொடுமையை நீக்க இயலாதே

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
     தூக்கிக் கொண்டு போனாலும்
எட்டி நின்றே  குப்பைகளை-தூக்க
    எறிந்து விட்டுச் செல்வாரே
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
     தவறே நாளும் செய்வாரே
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
    குறையின்றி வீதியில் சிதறிவிடும்

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
     சொல்லினும் கேளார் பலபேரே
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
     தனக்கென என்றும் போவரே
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
     முறையாய் அதிலே சிலவற்றை
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
     எழுதினேன் தருவீர் கருத்துரையே

            புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
    தூக்கிக் கொண்டு போனாலும்
    எட்டி நின்றே குப்பைகளை-தூக்க
    எறிந்து விட்டுச் செல்வாரே/



    உண்மையாகவே கூடுதலாக இப்படித்தான் நடக்கிறது ஐயா..
    அழகாக சொன்னீங்க..
    மனிதனாலே மனிதன் குப்பைக்குள் இருக்கவேண்டிய சூழலை உருவாக்குவது உண்மை...
    புலவரே அற்புதமான கவிதை...

    ReplyDelete
  2. நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
    நோய்கள் பிறக்கும் தாயன்றோ
    கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
    கொடுமையை நீக்க இயலாதே

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  3. சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
    சொல்லினும் கேளார் பலபேரே
    தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
    தனக்கென என்றும் போவரே//
    அசத்தலான வரிகள்..

    ReplyDelete
  4. அருமையான வரிகள்...
    அற்புத கவிதை..புலவரே...

    ReplyDelete
  5. நல்ல அற்புதமான
    அவசியமான கருத்தை
    கூறும் கவிதை...

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
    சொல்லினும் கேளார் பலபேரே
    தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
    தனக்கென என்றும் போவரே


    ..... சமூகத்தில் இருக்கும் பல முகங்களை அருமையாக கவிதை வரிகளில் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தெருக்களும் சுத்தமாக இருப்பதற்கு மக்களின் முயற்சியும் பெரும் பங்கு வகிக்கிறதே. சரியாக சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐய்யா இது ஒரு சமூக விளிப்புணர்வுக் கவிதை எல்லாருக்கும் சென்றடைய வேண்டும்..

    ReplyDelete
  8. நல்லதொரு படைப்பு...

    பின்பற்றுவோம்.... தூய்மையை காப்போம்...

    எனக்கு ஒரே ஒரு சிறுகுறை... தவறாக நினைக்க வேண்டாம்...

    பிளாஸ்டிக் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் தவிர்த்து தமிழ் வார்த்தையில் கூறியிருக்கலாம்...

    (நெகிழி என்று குறிப்பிட்டு கீழே பிளாஸ்டிக் என்று பொருள்பட விளக்கி இருக்கலாம்...)

    ReplyDelete
  9. நல்ல கவிதை.
    மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
    நன்றி ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  10. ஆக்கமிகு படைப்பு புலவர் ஐயா
    மனித முகங்களின் வகைகளை
    கூறுபோட்டு காட்டிவிட்டீர்கள்...
    அருமையான கவிதை.

    ReplyDelete
  11. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய ஆபத்தை நம் மக்கள் உணராமல் இருப்பது தான் வேதனை..

    ReplyDelete
  12. எண்ணிப் பார்க்கும் நல்லவர்கள்,திண்ணிய முடிவு எடுத்திட்டால் நலமே விளையும் நாட்டினிலே!
    அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
  13. நல்ல கருத்தை நயம்படச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  14. குப்பையைக் கொண்டு கூட ஒரு
    அற்புதமான கவிதையைச் சொல்லமுடியுமா ?
    சிந்திக்கும் திறம் இருந்தால்
    செந்தமிழ் திறமிருந்தால்
    நிச்சயம் முடியும் என்பதற்கு
    இப்படைப்பே ஒரு நல்ல உதாரணம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நாம் அனைவரும் எம் அன்றாடக் கருமங்களைச் செய்யும் போது, உணர்ந்து செய்தால், ஊர், நகரம், பிரதேசம், நாடு என அனைத்தும் தூய்மையாக விளங்கும் எனும் சேதியினை உங்களின் இக் கவிதை விளம்பி நிற்கிறது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...