Thursday, August 18, 2011

திருக்குறள்

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்

சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

23 comments:

  1. உங்க தமிழ் படிக்க ஆசையா இருக்கு.. புதுக்கவிதை யுகத்தில் மரபுக் கவிதைகள். பாராட்டுகள்//

    ReplyDelete
  2. குறள் புகழ் பாடும் கவிதை.... அருமை புலவரே

    ReplyDelete
  3. திருக்குறளுக்கு அழகிய மரபுக்கவிதை...

    திருக்குறளுக்கு புகழ்பாடி தாங்கள் பெருமையடைந்துள்ளீர்...

    வாழ்த்துக்கள்.. ஐயா...

    ReplyDelete
  4. குறளில் மயங்கியவன்தான் தங்களை போல

    ஆயினும் குறளில் குறை இல்லாமல் இல்லை

    ReplyDelete
  5. குறள் பற்றிய உங்கள் கவிதைக் குரல் அருமை ஐயா!

    ReplyDelete
  6. ஐயா இராமானுசம்
    ஒன்றே முக்காலடியில் உலகை அளந்த
    திருக்குறள் பற்றிய அழகிய எழில் கவிதை.
    படிக்க படிக்க உள்ளம் பூரிக்கிறது.

    ReplyDelete
  7. இது நவீன குறள்...அருமை...புலவரே...

    ReplyDelete
  8. குறள்படித்தேன்...குறள் படித்தேன்...
    தங்கள் எழுதிய கவிதை படித்தேன்...
    அருமை..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. உலகப் பொதுமறைக்கு புகழ்மாலை...அருமை!

    ReplyDelete
  10. மிக அழகாகச் சொன்னீங்க புலவரே..

    ReplyDelete
  11. மாணவர்களுக்கு அதிகமாக எடுத்துக்காட்டி விளக்கும் இலக்கியம் திருக்குறள்தான் புலவரே.

    நிறைய குறள் சார்ந்த விளையாட்டுகள் நடத்துவதுண்டு.

    காலம் போற போக்கில் அடுத்த தலைமுறைக்கு திருக்குறளை அவர்களுக்குப் புரியும் நடையில் எடுத்துச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது புலவரே.

    ReplyDelete
  12. எங்கும் தெய்வ நூல் மயமாகட்டும்... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...திருக்குறளின் புகழ் ஓங்கிக்கொண்டே இருக்கட்டும்...நன்றி புலவர் ஐயா

    ReplyDelete
  13. அருமையான கவிதை ஒவ்வொரு வரிகளிலும்
    உயிரோட்டம் உள்ள கருத்துக்கள் .நன்றி ஐயா.
    உலகப்பொதுமறையாம் திருக்குறளின் அருமைதனை
    உணர்ந்து எம்தமிழ் மொழியை அழகிய செந்தமிழ் மொழியை உலகத்தில் சிறந்த மொழியென அறிவிக்கும் நன் நாள் விரைவில் மலரவேண்டும்.இதுதான் எம் அனைவரின் ஏக்கமும் .நன்றி ஐயா பகிர்வுக்கு........

    ReplyDelete
  14. எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
    இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை//

    உண்மை ஐயா!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
    உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
    திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
    திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.


    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. குறள் இனிது அறிவோம் ....
    உங்கள் மறபு கவிதையும் மிக இனிது அருமை

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,
    எப்படி இருக்கிறீங்க?
    நலம் தானே?
    என் கணினி இணைய இணைப்பில் ஏதோ கோளாறு,
    அதனால் தான் வலைப் பக்கம் வர முடியலை.
    மன்னிக்கவும்,

    ReplyDelete
  18. தெள்ளு தமிழில் திருக்குறளின் பெருமையினைத் தித்திப்பாய் இனிக்கும் கவியாக வடித்துள்ளதோடு;
    தமிழின் பெருமையினை உலகறியச் செய்யும் வண்ணம் திருக்குறளின் புகழும் வையமெல்லாம் ஓங்க வேண்டும் என ஆசைக் கவி வடித்துள்ளீர்கள்.
    இந்த ஆசை வெகு விரைவில் நிறை வேறும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  19. திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
    திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

    அருமையான படைப்பு. எனது முகநூலில் உங்கள் பதிவைப் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துக்கள் ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  20. அசத்தலான நச் வரிகள் ஐயா...

    திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவரையும் செந்தமிழின் இனிமையையும் எல்லாமே மிக அருமையாக வார்த்தைகளாக்கி கோர்த்து விருந்து படைத்த விதம் அருமை ஐயா..

    பின்னாளில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை முன்னரே யூகித்து அதற்கான வழிமுறைகளை அறவுரைகளை மிக அருமையாக இரண்டே அடிகளில் உலக வாழ்வியலை தமிழின் இனிமையை நல்லவை எல்லாமே திருக்குறளாய் வடிவெடுத்ததை இங்கே நீங்கள் கவிதையாய் தந்திருப்பது மிக சிறப்பு ஐயா...

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு...

    ReplyDelete
  21. நான் போட்ட கமெண்ட் எங்க போச்சு

    ReplyDelete
  22. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    Hương Lâm chuyên cung cấp bán máy photocopy và dịch vụ cho thuê máy photocopy giá rẻ, uy tín TP.HCM với dòng máy photocopy toshiba và dòng máy photocopy ricoh uy tín, giá rẻ.

    ReplyDelete