Sunday, August 14, 2011

சுதந்திரத் தேவியே தரவேண்டும்

      பாருக்  குள்ளே  நம்நாடே-புகழ்
          பாரதம்!  உண்டா அதற்கீடே
      ஊருக்கு ஊரே!  கொடியேற்றி-இன்று
          ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
      பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
          போற்றியே  புகழ்ந்து மறுநாளே
       யாருக்கும் நினைவில் வாராதே-இனி
          என்றும் இந்நிலை மறாதே

      வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
        வந்தே  மாதரம்   ஊருக்காம்
      தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
         தன்னல மிக்கோர் ஈண்டுசில
      சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
         செப்பும் நிலையே  ஆனதென
      நிந்தனை செய்து என்னபலன்-இந்த
          நிலையை மாற்ற எவருமிலன்


      வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
          வேதனை  தீர்ந்தது  என்றாலும்
      கொள்ளையர் சிலர்கை  அகப்பட்டோ-நாளும்
          கொடுமை அந்தோ மிகப்பட்டே
      தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
          தொடர்கதை யாகப் போயிற்றே
       எல்லை  மீறின்  தன்னாலே-நாம்
          இழப்போம் அனைத்தும் பின்னாலே
 
       
       கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
          கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
       கள்ள  வாணிகம் சுதந்திரமே-பொருள்
           கலப்படம் செய்யவும் சுதந்திரமே
       வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
           விடுதலை நோக்கி நடைபோட
       நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
          நாளில் வரமே தரவேண்டும்

19 comments:

  1. வணக்கமையா கவிதை அருமை.. அதுவும் சுதந்திரத்தைப்பற்றி சரியான தருனத்தில் படைத்துள்ளீர்கள் தங்கள் ஆக்கத்தை... இக்கவிதையை பார்த்தாவுதல் திருந்துவார்களா இவர்கள்..??

    ReplyDelete
  2. வேண்டும் இன்னொரு சுதந்திரம் ...கவிதை அருமையோ அருமை !

    ReplyDelete
  3. நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்

    அனைவரின் எண்ணம் இதுதானே கவிஞரே..

    ReplyDelete
  4. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. //வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
    விடுதலை நோக்கி நடைபோட
    நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்//

    அந்த நல்லோர் இனியா பிறக்கப் போகிறார்கள்? நாம் உருவாக்க வேண்டாமோ?

    எழுச்சிமிகு கவிதை.

    ReplyDelete
  6. உண்மை புலவரே முற்றிலும் உண்மை தூய நாள் மிக அருகில் தான் இருக்குது நம் இளஞர் மனதில் இதன் நிழல் விழுந்தால் கூட போதும் எழும் எழுச்சி நம் நாடும் சேர்ந்து எழுந்திடும் அன்று

    மிகவும் ரசித்தேன் தங்களின் ஆசி கோரும்

    ஜேகே

    ReplyDelete
  7. நல்லோர் ஆள வரவேண்டும்.
    யார் வருவார்கள்.
    வளரும் தலைமுறை அரசியலை வெறுக்கிறது. அந்த அளவுக்கு அரசியலை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.
    -- சரியான தருணத்தில் தக்கதொரு கவிதை .
    நன்றி

    ReplyDelete
  8. நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்

    சிறந்த வரிகள் ஐயா கவிதை அருமை

    சிறிய வேண்டுகோள் தளத்தில் பின்புறத்தில் உள்ள டிசைனால் படிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது வேறு டிசைன் மாற்றுங்கள் ஐயா

    ReplyDelete
  9. நல்லதொரு அருமையான கவிதை. அன்று எவனோ அன்னியன் நம்மை ஆட்சி புரிந்து, அடிமைப்படுத்தி ஏமாற்றினான். இன்று நம் ஆட்களே சுதந்திரமாக நம்மை ஏமாற்றி வருகின்றனர் என்பதை அழகுபடவே சொல்லியுள்ளீர்கள்.

    //நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்//

    நிச்சயமாக ஒரு நாள் இந்த தங்களின் பிரார்த்தனை நிறைவேறும். நல்லதை நினைப்போம்; நல்லதே நடக்கும்!


    [இந்த மாதம் முழுவதும் சொந்த பந்தங்கள் + விருந்தினர் வருகையால் வலைப்பக்கம் அதிகமாக வர முடியாமல் உள்ளது.]

    ReplyDelete
  10. //நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்//

    சுதந்திரத் தினக் கவிதை அருமை
    சுதந்திரம் பெற்று ஆண்டு கூடக் கூட
    பிரச்சனைகளும் கூடிக்கொண்டுதான் போகிறது
    நல்லோர் ஆள வரவேண்டும் எனபது சரி
    அவர்களை தேர்ந்தெடுக்க முதலில் நாம்
    தயாராக வேண்டும்
    நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்
    தரமான பதிவு
    சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள், ஐயா!

    ReplyDelete
  13. பொதுவாக, சனி - ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பதிவுலகம் பக்கம் வர இயலாமல் போய் விடுகிறது. உங்கள் கருத்துரைக்கும் கவிதைக்கும் விசாரிப்புக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  14. வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
    விடுதலை நோக்கி நடைபோட
    நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
    நாளில் வரமே தரவேண்டும்/

    இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. சாடும் கவியிலும் பாடும் தமிழ் அழகு. நல்லோரே நாடாளவேண்டுமென்பது நம் எல்லோரின் கனவு அல்லவா? கனவு என்றேனும் மெய்ப்படும். அதற்கான விதையாய்க் கவிதைகள் உருவாகிக்கொண்டே இருக்கட்டும்.

    ReplyDelete
  16. அந்நிய ஆட்சியிலிருந்துதான் விடுதலை பெற்றோம். ஆனால்....ஏழ்மையிலிருந்து, அறியாமையிலிருந்து, ஜாதிமதஇன பேதங்களிலிருந்து, போட்டி பொறாமை பேராசை, சுரண்டல், இன்னபலவற்றிலிருந்து சுதந்திரம் பெற்று விட்டோமா.?நம்மை நாமே உணர்ந்து திருத்திக்கொள்ளாதவரை உண்மை சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே கொள்ளவேண்டும். கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
    வேதனை தீர்ந்தது என்றாலும்
    கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
    கொடுமை அந்தோ மிகப்பட்டே
    தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
    தொடர்கதை யாகப் போயிற்றே
    எல்லை மீறின் தன்னாலே-நாம்
    இழப்போம் அனைத்தும் பின்னாலே

    உள்ளம் கொதிக்க வைக்கும் உண்மையின் வெளிப்பாடு
    அழகிய கவிதை வரிகளாய் படைத்திருக்கும் தன்மை
    அருமை!.....உண்மையான சுதந்திரம் மலர இதை உணர்ந்து
    அனைவரும் பாடுபட வேண்டும்.நன்றி ஐயா அழகிய
    கவிதைப் பகிர்வுக்கு.வாழ்த்துக்கள் உண்மையான சுதந்திரம்
    மலர...........

    ReplyDelete
  18. அரசியலில் தூய்மை வரப்பெற்றால் பெற்ற சுதந்திரத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று சொல்லால் அழுத்தமாய் வரிகள் அமைத்த கவிதை ஐயா....

    நல்லவை எல்லாம் செய்யத்தானே சுதந்திரம் பாடுப்பட்டு பெற்றது? அந்த நல்லவை இப்போது நல்லவையாக இல்லாமல் நாடே இப்படி கிடக்கிறதே என்ற ஆதங்கத்தில் வரைந்த கவிதை சபாஷ் பெறும் சிறப்பான வரிகள் அமைந்த கவிதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  19. வணக்கம்
    ஐயா

    இன்று இந்தியாவின் சுதந்திர நாளில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/blog-post_15.html?showComment=1376568104980#c892188592548843204 இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete