Tuesday, July 12, 2011

நண்பனே நண்பனே நண்பனே

             முன்னுரை

கண்ணாய் விளங்கும் நண்பர்களை
கவிதை நடையில் எழுதுமென
அண்ணா என்றே ஆணையிட்ட
அன்பு சோதரி இராஜேஷ்வரிக்கு
     நன்றி நன்றி நன்றி

  
நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
நவிலுதல் எனக்கே  அரிதாமே
பண்பொடு பழகினர் அவர்தாமே
பலரை விட்டால்  தவறாமே

ஆனால் சொல்ல ஆகாதே
அதனால் அவர்மனம் நோகாதே
நானாய் எடுத்த முடிவொன்றே
நன்கே ஆய்ந்து சரியென்றே

பள்ளி தொட்டு இன்றுவரை
பாசம் காட்டி பழகியுரை
அள்ளிக் கொட்ட அன்பாலே
அணைத்தான் அவனே பண்பாலே

சொல்லப் பெருமிதம் கொள்கின்றேன்
சொல்லின் அவன்பெயர் சதாசிவம்
எள்ளுள் இருக்கும் எண்ணையென
என்னுள் அவனது அன்பேசிவம்
          இன்று
கருத்தை அச்சில் தட்டுகிறேன்
கவிதையாய் வலையில் தீட்டுகிறேன்
திருத்த வேண்டின் திருத்துகிறேன்
தினமும் வலையில் பொருத்துகிறேன்
           அன்று
எழுதி அடித்து எழுதிடுவேன்
எடுத்து அதனை படித்திடுவான்
பழுதே இன்றி படியெடுத்து
படிக்க என்னிடம் கொடுத்திடுவான்
        அவனே
என்றும் எந்தன் உயிர்நண்பன்
எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
நன்றி மறவேன் என்நண்பா
நலமுற வாழ வாழ்த்துப்பா

தேக்கம் இன்றி கவிதைகளை
தெளிவாய் நானும் எழுதிடவே
ஊக்கம் தந்தது அவனன்றோ
உரமாய் இருந்தது அவனன்றோ

13 comments :

  1. தேக்கம் இன்றி கவிதைகளைத்
    தெளிவாய் நீங்கள் படைப்பதனால்
    ஆக்கம் பெறுவோர் நாங்களன்றோ-எனவே
    நீரே எமக்கு குருவன்றோ

    ReplyDelete
  2. நட்பின் பெருமை சொன்ன இரத்தின கவிதை ஐயா
    அருமை அருமை

    ReplyDelete
  3. நன்றி ஐயா ...இந்த கவிதைக்கு உந்துதல் அளித்த சகோ ராஜேஸ்வரிக்கும் நன்றி

    ReplyDelete
  4. என்றும் எந்தன் உயிர்நண்பன்
    எழுமை பிறப்பிலும் தொடர்நண்பன்
    நன்றி மறவேன் என்நண்பா
    நலமுற வாழ வாழ்த்துப்பா//

    வேண்டுகோளை இத்தனை அருமையாய்
    நிறைவேற்றிய கவிஞருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நண்பரே நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களால் மட்டும் தான் முடியும் இப்படி எழுத

    ReplyDelete
  7. கருத்துரை வழங்கிய அனைவருக்கும்
    நன்றி நன்றி நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வரிகள் கனகச்சிதம் ஐயா, வாழ்க,தொடர்க உங்கள் நடப்பு ...

    ReplyDelete
  9. அடுக்கி வந்த சொற்களில் ஆழநுழைந்து பார்க்கின்றேன். சொக்கத்தங்கம் போலவே ஜொலிக்குதென் உள்ளம் எங்கும்.

    ReplyDelete
  10. கவிதையில் வார்த்தைகளும் நட்போடு கை கோர்த்து நான் உன்னுடன் என்கிறது.உங்கள் நட்பு இன்னும் தொடர என் அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  11. நண்பர்கள் பட்டியல் பெரிதாமே
    நவிலுதல் எனக்கே அரிதாமே
    பண்பொடு பழகினர் அவர்தாமே
    பலரை விட்டால் தவறாமே//

    வணக்கம் ஐயா.. இப்படிச் சொல்லி, மிகவும் சுருக்கமான கவிதையினூடாகத் தந்து எஸ் ஆகிட்டீங்களே..

    ஹி...ஹி...

    ReplyDelete
  12. வித்தியாசமான ஒரு முயற்சி ஐயா. நண்பர்கள் தான் எம் அருகிருந்த் எங்களின் சில வெற்றிகளுக்கு உறு துணையாக இருப்பார்கள். அந்த வகையில் உங்கள் கவிதைப் பணிக்குப் பக்க பலமாக இருந்தோரை நினைவில் நிறுத்திக் கவி புனைந்திருக்கிறீங்க்.

    கவிதை நடையில் நண்பர்களைப் பற்றிய நினைவு மீட்டல் புலவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக இங்கே வந்துள்ளது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...