Monday, July 11, 2011

உயிரை இங்கே ஏன்விட்டாய்

எழுத கருத்துகள் வந்திடுதே-முதுகும்
    இயலா நிலமை தந்திடுதே
விழுதாய் தாங்கும் இருபெண்கள்-எனை
    விரும்பி காக்கும் இருகண்கள்
பழுதே இன்றி பெற்றேனே-பெரும்
   பயனே அவரால் உற்றேனே
தொழுவேன் நாளும் அவர்வாழ-தூய
   திருமலை தெய்வம் தாள்தாழ

பெற்றதே பெண்கள் என்றாலும்-நான்
    பெருமை  கொள்ளவே எந்நாளும்
கற்றதே கல்வி சிறப்பாக-தம்
   கடமை உணர்ந்து பொறுப்பாக
நற்றமி ழோடு ஆங்கிலமே-அவர்
   நன்கு கற்ற பாங்கிலுமே
உற்றனர் இன்று நல்வாழ்வே

என்னை விட்டுப் போனாலும்-என்
   இதயம் விட்டுப் போகாத
பொன்னின் மாற்று பொருளாக-ஐம்
    புலனாய் வாழ்ந்து அருளாக
தன்னை எனக்குத் தந்தவளே-நல்
    தாரமாய் வாழ வந்தவளே
உன்னை விட்டது ஒன்றேதான்-என்
   உயிரை வாட்டுது இன்றேதான்

போடி என்றே ஒருநாளும்-நான்
   புகன்ற துண்டா ஒருநாளும்
வாடி என்றே ஒருநாளும்-சொல்
    வழங்கிய  துண்டா ஒருநாளும்
தேடி நானும் அலைகின்றேன்-எட்டு
   திசையும் நோக்கி குலைகின்றேன்
ஓடி எங்கோ போய்விட்டாய்-என்
     உயிரை இங்கே ஏன்விட்டாய்

20 comments:

  1. நானும் தங்களைப் போன்றேஇரண்டு பெண்களைப் பெற்று
    அவர்களது வளர்ச்சியில் மகிழ்ந்து கொண்டிருப்பவன்
    இவன் தந்தை என்னோற்றான் கொள் என்ற
    வள்ளுவன் வாக்கின்படி வாழும் அவர்கள் மேலும் சிறந்து வாழ
    எல்லாம் வல்லஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
    உங்களிடம் பாண்டித்தியம் உள்ளதால் எதையும்
    மிக இயல்பாகவும் மிகச் சரியாகவும் கவிதையில்
    சொல்லிவிடுகிறீர்கள்.நாங்களும் கற்றுக் கொள்ள
    வசதியாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விரும்பி காக்கும் இருகண்கள்
    பழுதே இன்றி பெற்றேனே-பெரும்
    பயனே அவரால் உற்றேனே
    தொழுவேன் நாளும் அவர்வாழ-தூய
    திருமலை தெய்வம் தாள்தாழ

    அருள் பெற்று மனக்காயம் மாறி ஆறுதல்பெற்ப்பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. நண்பர்களைப் பற்றி கவிதை நடையில் எழுத வேண்டுகோள் ஐயா. நன்றி.

    ReplyDelete
  4. ஐயா..எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வருது.மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.என்னதான் பிள்ளைகள் அருகில் இருந்தாலும் அன்பின் ஆறுதல் தேடும் உங்களுக்கு சொல்ல எதுவும் வார்த்தைகள் இல்லை.இதுதான் வாழ்வு என்று நிறைய எழுதுங்கள்.மனம் அமைதியாகும் !

    ReplyDelete
  5. உங்கள் மகள் மாரின் பெருமையும் மனைவியின் அருமையும் அப்படியே கவிதையாக

    ReplyDelete
  6. உள்ள உனர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கவிமாலை தொடுக்கிறீர்கள்!

    ReplyDelete
  7. Ramani said...

    என்னைப்போல் ஒருவர் நீங்கள்
    எல்லையில் உவகை தாங்கள்
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வேடந்தாங்கல் - கருன் *! said...

    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...

    நன்றி சகோதரி
    உங்கள் அன்பு ஆணை நாளை நிறை
    வேற்றப்படும்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. ஹேமா said...

    சோதரி, உங்களைப் போன்றவர்களின்
    அன்பும் ஆறுதல் மொழிகளும் தான் என்னை
    வாழ வைத்துக் கொண்டிருக்கிறது
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கவி அழகன் said...

    வருவாய் முதலில் தம்பி-இன்று
    வந்தது தாமதம் தம்பி

    நன்றி,
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...

    உடன் பிறவா சகோதரரே
    உங்கள் பாராட்டுக்கு தலை தாழ்ந்த
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. பெற்றதே பெண்கள் என்றாலும்-நான்
    பெருமை கொள்ளவே எந்நாளும்
    கற்றதே கல்வி சிறப்பாக-தம்
    கடமை உணர்ந்து பொறுப்பாக
    நற்றமி ழோடு ஆங்கிலமே-அவர்
    நன்கு கற்ற பாங்கிலுமே
    உற்றனர் இன்று நல்வாழ்வே/


    ஆகா அழகான அருமையான கவிதை!!
    ஆகா அழகான அருமையான கவிதை
    ஐயா....வாழ்த்துக்கள் உங்கள் கவித்துவத்திற்கு

    ReplyDelete
  14. தன்னைத் துணையாக ஆசைப்பட்ட மனைவியோடு சொர்க்கத்தில் மீண்டும் இணைந்து வாழ ஆசைப்படும் கவிஞனின் உணர்வினை இக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

    ஐயா.....அவசரம் வேண்டாமே. நீங்கள் தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது ஐயா.

    ReplyDelete
  15. vidivelli said...

    இன்னும் இன்னும் எழிதிடவே
    என்னைத் தூண்டும் விடிவெள்ளி
    கன்னல் இனிமை தருகின்றீர்
    கருத்தும் சொல்லி வருகின்றீர்

    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நிரூபன் said...

    சகோ
    என்றேனும் எங்கேனும் எப்படியேனும்
    உங்களை சந்திப்பேன் என்று என் உள்மனம் சொல் கிறது அது நிகழுமானால் என்வரலாறு கேட்டு வேதனையின் உணர்வுகளை உணர்வீர்கள். காலம்
    வரும் காத்திருப்போம்


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ///என்னை விட்டுப் போனாலும்-என்
    இதயம் விட்டுப் போகாத
    பொன்னின் மாற்று பொருளாக-ஐம்
    புலனாய் வாழ்ந்து அருளாக
    தன்னை எனக்குத் தந்தவளே-நல்
    தாரமாய் வாழ வந்தவளே
    உன்னை விட்டது ஒன்றேதான்-என்
    உயிரை வாட்டுது இன்றேதா///படித்த பின் மனதை வாட்டிய வரிகள் ஐயா..(

    ReplyDelete
  18. அருகி வரும் மருபுக்கவிதை எழுதும் கவிஞர்கள் மத்தியில் நீங்கள் அழகாக மரபுக்கவிதை எழுதுகிறீர்கள், நிரூபன் சொன்னது போல உங்கள் பங்களிப்பு இன்னமும் தமிழுக்கு தேவை. தொடர்ந்து செயற்படுங்கள்..

    ReplyDelete
  19. கந்தசாமி. said...

    நன்றி! நண்பரே
    உங்களைப் போன்றாரின் ஊக்கமும்
    தம் நலன் காண நோக்கமும் உந்துதலாக என்னை
    என்னை வளரவைக்கும், வாழ வைக்கும். எனவே
    பணி தொடரும்
    இராமாநுசம்

    ReplyDelete