Wednesday, June 29, 2011

மேதினம் போற்றுவோம்!


சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனை
சுரண்டி உண்பவன் முதலாளி
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடண் வாழ்பவன் முதலாளி
திரண்டிட அணியென தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையை போற்றுதும் இத்தினமே

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே
தருக பல்வகை தொழிலோங்க - ஏதும்
தடையின்றி பற்றா குறைநீங்க
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி
பேதத்தை நீக்கும நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே

செய்யும் தொழிலே தெய்வமென் - முன்னோர்
செப்பிய வழியே செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்து
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்கு காரணம் இத்தினமே

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடப் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திட செய்தாய் மேதினமே.

                                        புலவர்   சா.இராமாநுசம் 


11 comments:

  1. மேதினி தன்னில் மேதினமே - அவர்
    மேன்மைக்கு காரணம் இத்தினமே///

    மேன்மையாய் அமைந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா ஒவ்வொரு வரிகளும் அசத்துது

    ReplyDelete
  3. //வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
    வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
    கல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்
    கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை///


    வார்த்தைகளில்
    தொழிலாளர்தன் வேதனையையும்
    அவர்தம் சாதனையையும்
    தெள்ளு தமிழில்
    சொல்லிய விதம்
    அபாரம் ஐயா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அய்யா ..

    ReplyDelete
  5. //எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திட செய்தாய் மேதினமே.//

    இதை போலவே ஒற்றுமைக்கு
    இன்னும் வேணும் பல நாட்கள்
    (முடிந்தால் எல்லா நாளும் )
    இன்னும் வேணும் பல கவிதைகள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. என் பதிவினைத் தொடர்பவராக உங்களை இன்றுதான் அறிந்தேன். நான் உபயோகிக்கும், என்னிடம் இருக்கும் இரண்டு ப்ரௌசர்களாலும் தொடர்பவர் பட்டியல் அறிய முடிவதில்லை. வயதில் மூத்தவனாக இருந்தாலும் எழுத்துலகில் இன்னும் அறியப் படாதவனே. உள்ளத்து உணர்வுகளுக்கு வடிகாலாகவே என் வலைப்பூவை நான் எண்ணுகிறேன். அறிஞர்களும் சிறந்த எழுத்தாளர்க்கும் மத்தியில் நான் என்னை ஒரு ஊர்க்குருவியாகவே நினைத்துக் கொள்கிறேன். உங்கள் பதிவுக்கு நானும் வருவேன் படிப்பேன் நன்றி.

    ReplyDelete
  7. மே தின வாழ்த்துக் கவிதை அருமை
    அனைத்து வரிகளும் அழகுடனும்
    பொருளுடனும் இருக்கையில்
    எதைத் தனித்துச் சொல்வது
    நல்ல கவிதை படைக்க
    முயல்வோருக்கு நல்ல வழிகாட்டும் கவிதை

    ReplyDelete
  8. << சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனை
    சுரண்டி உண்பவன் முதலாளி >>

    ஐயா, இந்தக் கம்யூனிசக் கருத்துக்களோடு என்னால் உடன்பட முடியவில்லை.

    ReplyDelete
  9. ஐய்யா அத்தனையும் அருமை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனை
    சுரண்டி உண்பவன் முதலாளி
    வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
    வளமுடண் வாழ்பவன் முதலாளி

    supper...

    ReplyDelete
  11. உழைப்பாளிகளின் நிலையினையும், அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதனையும் உங்களின் கவிதை உரைத்து நிற்கிறது.

    ReplyDelete