Friday, June 24, 2011

அரைக்கணமும நில்லாது விரைந்தே வாரும்

புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- எண் 1  புலவர் சா இராமாநுசம்

     நானில்லை  நீயெனக்  கில்லை  என்றால-மேலும்
           நலிந்துவிடும்  நம்வாழ்வே   பிரிந்துச்  சென்றால்
     வீணில்லை  என்வார்த்தை  நம்பு  என்றீர்-என்
           வேதனையை  குறைத்தேதான்  நீரும  சென்றீர்
     ஏனில்லை  சென்றபின்னர்  அத்தான்  நெஞ்சில்-அந்த
           எண்ணம்தான்  தினம்வாட்ட  அறியேன்  துஞ்சல
     தேனில்லை  என்றுமலர்  பலவே  நாளும்-தேடித்
           திரிகின்ற    வண்டெனவே  ஆனீர்  போலும்

    தாக்கவரும்    புலிகூட  பெண்ணைக்  கண்டே-சற்று
          தயங்குமெனச   சொல்லுகின்ற  கதைகள்   உண்டே
   காக்கவொரு  ஆளில்லை  பெண்ணை என்றால் – அவர்
          கற்பென்ன  கடைச்சரக்கா  தெருவில்  சென்றால்
   நோக்குகின்ற தன்மையெல்லாம்  பழுதே    அத்தான்-அதை
          நோக்கிபல   நாள்முழுதும்  அழுதேன்  அத்தான்
   ஆக்கிவைத்த  சோறாக  இந்த   ஊரே-என்னை
          அள்ளிஉண்ண     பார்க்கிறது  வருவீர்  நீரே

     காய்த்தமரம்  காவலின்றி  தனியாய்  ஊரில் –நிற்க
          கண்டவரின்   கல்லடியை  பெறுமே  பாரில்
      வாய்தவனும்  பிரிந்திருக்க  ஏழை  ஆனால-அவள்
          வாழவழி   இல்லையது  சொல்லப்   போனால்
      தேய்த்தெடுத்த   சந்தணத்தை  தெருவில்  வீச-நீர்
          தேடிவந்து   எடுப்பீரா  மார்பில்  பூச
      மாய்த்துவிடும்  நெடும்பிரிவே  என்னை  உலகில்-இதை
          மறவாதீர்   மணவாளா  துயரம்  அலகில்
   
      பழுத்தபழம்  எத்தனைநாள்  வைத்தே  அத்தான்-நல்
          பக்குவமாய்  பாதுகாக்க  முடியும்  அத்தான்
      புழுத்ததென  பின்னரதைக்    கண்டு  வீணே-நீர்
          புலம்புவதில்  பயனில்லை  அதனால்  நானே
      கழுத்துவரை  நீர்ரலையில்  நின்று  விட்டேன்-அடுத்த
          கணமென்ன  அறியீரா  நம்பிக்   கெட்டேன்
      அழுத்துவதும்  என்தலையே  நீரில்  நீரும்-உடன்
          அரைக்கணமும்  நில்லாது  விரைந்தே   வாரும்

                            புலவர் சா இராமாநுசம்

9 comments:

  1. அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்//

    அருமையாய் மனக்கனத்தை விவரிக்கும்
    அற்புதக் கவிதைக்கு வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. //மாய்த்துவிடும் நெடும்பிரிவே என்னை உலகில்-இதை
    மறவாதீர் மணவாளா துயரம் அலகில்//
    சுடும் தீயல்லவா காதலர் பிரிவு?
    சிறப்பான கவிதை!

    ReplyDelete
  3. அதிசயமாய் பதிவுலகில் ஒரு மரபுக் கவிதை..

    ReplyDelete
  4. // காய்த்தமரம் காவலின்றி தனியாய் ஊரில் –நிற்க
    கண்டவரின் கல்லடியை பெறுமே பாரில்
    வாய்தவனும் பிரிந்திருக்க ஏழை ஆனால-அவள்
    வாழவழி இல்லையது சொல்லப் போனால்
    தேய்த்தெடுத்த சந்தணத்தை தெருவில் வீச-நீர்
    தேடிவந்து எடுப்பீரா மார்பில் பூச//


    காதலின் கொடுமை
    தலைவனை பிரிந்திருத்தல்
    அந்த
    கொடுவாளால் கிழிக்கும்
    கொடுமையை
    கொற்றவன் போல்
    கொள்கை தமிழில்
    கொடுத்த விதம்
    கொள்ளை அழகு - தமிழ்
    கோமானே

    ReplyDelete
  5. உண்மையில் காதலன் இக்கவிதையை படித்தால்
    அரைக்கணம் கூட தாமதியாது நிச்சயம் வந்து சேருவான்
    பெண்ணின் சூழலையும் மன நிலையையும்
    அத்தனை இயல்பாக சொல்லிப்போகிறது
    கவிதை வரிகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை
    அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே
    ஆஹா.. எத்தனை துடிப்பாய் வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன.. கவிதை முழுவதும்.

    ReplyDelete
  7. அத்தான் அத்தான் என்று மயங்க வைத்திருக்கிறீர்கள் காதலை.இப்போ யார் அத்தான் என்கிறார்கள்.வாடா போடா மடையாதான்.தன் தனிமையை அவஸ்தையை ஒரு பெண்ணின் மனநிலையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.காதல் அழகுதான் !

    ReplyDelete
  8. தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளத்து உணர்வுகளை மரபில் தந்திருக்கிறீங்க, அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete