Saturday, June 18, 2011

கொலைகாரா உன்னுடலை...?

ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

6 comments:

  1. இழந்ததைஎல்லாம்
    திரும்பா பெறமுடியாவிடினும்
    இருப்பதை எல்லாம்
    இனியாவது
    தருவார்களா ஐயா
    நல்ல கருத்தை
    சொல்லும்
    உங்கள் கவி
    மனதை வெல்லும்

    ReplyDelete
  2. ஐயா...ஈழத்தின் நிலைமையை அப்படியே உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.நிறையவே மதிற்குள் உழலுகிறது.வேண்டாம்.நடப்போம் அவர் வழி !

    ஐயா...சந்தோஷம் என் பக்கம் வந்து வாழ்த்தியமைக்கு.

    நன்றியோடும் அன்போடும் ஹேமா.

    ReplyDelete
  3. கண்கள் மீண்டும் குளமாகிறது வரிகளால்
    மாறாத்துயர் மாற்றுமா இவ்வுலகு
    காத்திருப்போம் காலம் பதில்சொல்லும்

    நன்றி ஐயா என் பக்கம் வந்து என்னையும் ஊக்குவித்தமைக்கு

    ReplyDelete
  4. //அழிவாய் நீயும்-பெரும்
    கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்//
    புலவர் வார்த்தை பலிக்கட்டும்
    புலையர் கூட்டம் அழியட்டும்!

    ReplyDelete
  5. ஐயா வலிக்கிறது இதயம்....
    எல்லாமே நேற்று நடந்தாய் இருக்குறது....
    எல்லாமே எங்கள் விதியாகிப் போய்விட்டது..
    வலி நிறந்த வரிகள்...
    அருமை...

    ReplyDelete
  6. அகவலில் ஈழத்தின் அவலத்தினை,
    அருகே இருந்து பார்த்தது போன்ற உணர்வோடு கமெராக் கண் கொண்டு படம் பிடித்து எழுதியிருக்கிறீங்க ஐயா.
    உங்களின் கவிதை ஊடாக எங்களின் கடந்த காலங்களைத் தரிசித்து மீண்டும் கண்களில் நீர் வரக் கண்டேன்.

    ReplyDelete