Thursday, June 16, 2011

சேனல் நான்கைக் கண்டேனே

வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

9 comments:

  1. நெஞ்சை குத்தி கிழிக்கும் வார்த்தைகளில்
    தமிழ படும் பாட்டை
    பகிர்ந்த விதம்
    மனதை கவலையாய்
    ஆட்கொண்டது

    ReplyDelete
  2. வலித்த நெஞ்சத்தினின்று வார்த்தைகள் வர மறுக்கின்றன!கட்டுப் பாடற்றுக் கண்ணீர் மட்டுமே வருகிறது.
    ஃபிஜித்தீவில் பெண்கள் பற்றிப் பாரதி எழுதினான் -
    “நெஞ்சங்குமுறுகிறார்-கற்பு
    நீங்கிடச் செய்யும் கொடுமையிலே யந்தப்
    பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப்
    பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
    தஞ்சமுமில்லாதே-அவர்
    சாகும் வழக்கத்தை---’

    இன்றிருந்தால் பாரதியின் கோபம் அறம் பாடியே அழித்திருக்கும் வெறியர்களை!

    ReplyDelete
  3. அந்த காட்சியை பார்க்க மனம் வரவில்லை எனக்கு...கொடுமையாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை...திரையில் பார்க்கவே மனம் அஞ்சி நடுக்குகிறேன்...

    இங்கே உங்கள் கவிதை படித்ததும் நிகழ்ந்தவை மனக்கண்முன் தோன்றி வதைக்கிறதே !

    கொடுமையை செயல் படுத்திய கயவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறதா ?

    கேள்விகள் ஆயிரம் பதில்கள் எவ்விடம் ??

    ReplyDelete
  4. இயன்றால் இந்த தளம் சென்று படிக்கவும்...
    நன்றி

    http://maruthupaandi.blogspot.com/2011/06/blog-post_15.html

    ReplyDelete
  5. anaiththum atputham ...........
    nallaayirukku sir...
    manathil varuththamaay irukku...
    aththanaiyum valikal niraintha kavithai...

    ReplyDelete
  6. ஐயா, மன்னிக்க வேண்டும், வேலைப் பளு காரணமாக உரிய நேரத்திற்கு உங்கள் வலைக்கு வர இயலவில்லை. நேற்றும் கூட பதிவினை எழுதி விட்டு கடமையில் கண்ணாகி விட்டேன்,

    அதனால் தான் நேற்று மாலையே வர முடியவில்லை.

    ReplyDelete
  7. வடமலை வாழும் கோவிந்தா-நான்
    வடித்த கண்ணீர் பாவிந்தா//

    பா இந்தா;- இதோ என் பா,
    பாவிந்தா. பாவினிலே விந்தை புரிபவன்/ தேர்ந்த பாவலன்.
    அடடா, ஐயா சிலேடையெல்லாம் புகுத்தியிருக்கிறாரே.

    ReplyDelete
  8. இக் கவிதை பற்றி நிறைய வார்த்தைகளைப் பகிர முடியும்.
    அயல் நாட்டில் இருந்தாலும் உங்களின் நினைவுகளும், உணர்வுகளும் எங்கள் மீது ஒன்றித்துப் போயுள்ளது என்பதற்குச் சான்றாக இக் கவிதையும் அமைந்துள்ளது.

    சனல் 4 இனைப் பார்த்தே உங்களது உணர்வுகள் இப்படிக் கொந்தளிக்கிறது என்றால்,
    இவற்றையெல்லாம் கண் முன்னே பார்த்து, சுய நலத்தோடு என் உயிரைக் காக்கும் நோக்குடன், ஆயுத முனைக்கு மண்டியிட்டு, கரம் கூப்பிக் கெஞ்சிய நாமெல்லாம் மனிதர்களே இல்லை ஐயா.

    தலை தாழ்த்துகிறேன் உங்களின் உணர்வுகளுக்கு.

    ReplyDelete
  9. உங்கள் குமுறல் தமிழ் ”மரபில்” வந்தது..
    வாசிக்கும் போது இதயம் நொந்தது..

    ReplyDelete