Tuesday, June 14, 2011

என் பாதையும் பயணமும்...



சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு
சிலைபோல் காணும் நிலைதந்தே
கன்னம் பாதி மறைந்திடவும-சோகம்
கண்களில் நன்கே நிறைந்திடவும
தன்னம் தனியே உனைக்காண-மேலும்
தவிப்பும் பயமும் முகம்பூண
என்னுள் நினைவுகள் தாக்கியதே-இதயம்
ஈழம் தன்னை நோக்கியதே

காலில் உனக்கோ செருப்பில்லை-அங்கே
காலொடு கையும் தோளுமில்லை
நாளும் அழிந்தது நமினமே-இங்கே
நம்மைப் பழித்திட நம்மனமே
தோலில் சுரணை வரவில்லை-இந்திய
தேசப் பற்றாம் புரியவில்லை
பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
பார்க்கும் பாவச் சின்னந்தான்

தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
தமிழர் வாழிடம் சுடுகாடே
அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
அழிய சதைகள் கிழிபட்டும்
கலையாத் தூக்கம் இந்நாட்டில்-கண்டு
காறித் துப்ப வெளிநாட்டில்
நிலையாய் பெற்றோம் பழியேதான்-அது
நீங்கக் காணபோம் வழியேதான்

மடிந்தவர் போக மற்றவரும-தம்
மனதில் அமைதி அற்றவராய்
விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
வேதனை தன்னில் மூழகிமனம்
முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்து
சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

கதறி அழுதும் வரவில்லை-ஏன
கண்ணீர் அவரக்கே கண்ணில்லை
பதறி துடித்தும் ஒலியில்லை-ஈனப்
படைகள் கேட்பின் வரும்தொல்லை
சிதறி ஓடிமறைந தாலும்-அதை
சிங்கள வெறியர் அறிந்தாலும்
குதறி அழிக்க வருவாரே-இந்த
கொடுமை தீர்பார் இனியாரே


புலவர் சா இராமாநுசம்

6 comments:

  1. தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
    தமிழர் வாழிடம் சடுகாடே //

    ஐயா., ஒரு சின்னத் திருத்தம் இவ் இடத்தில் வர வேண்டும்,
    கீ போர்ட் மக்கர் பண்ணி விட்டது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. அகதியாகித் தெருவெங்கும் அலைந்து, முட் கம்பி வேலிகளினுள் வாழ்ந்த எம் வாழ்வின் உணர்வுகளை உங்கள் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  3. மனதிற்குள் சந்த மெட்டை போட்டுக்கொண்டு பின்
    கவிமலர் தொடுக்க துவங்குகிறீர்கள் என
    நினைக்கிறேன் இல்லையெனில்
    இத்தனை சரளமாக வார்த்தைகள்
    வந்து அழகு சேர்ப்பது கடினமே
    உணர்வுபூர்வமான கவிதை
    தங்கள் பதிவினைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  4. இம்மாதிரியான கவிதை படித்து நாளாகிவிட்டது.. நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
    தமிழர் வாழிடம் சுடுகாடே
    அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
    அழிய சதைகள் கிழிபட்டும்

    தமிழர்களின் இயலாமையை எண்ணி
    வெட்கமும் வேதனையும்
    அடைகிறது மனம்
    அத்தனை துயரையும்
    ஒருங்கே கொண்டுள்ள வரிகள்

    ReplyDelete
  6. //இந்தகொடுமை தீர்பார் இனியாரே //

    நொந்துபோன நெஞ்சத்தின் குரல்.
    அவன்தான் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete