Friday, June 10, 2011

நீக்கிட வேண்டும் குறைசாடல்

நேற்றே எழுதினேன் ஒருபாடல்-உடன்
    நீக்கிட வேண்டும் குறைசாடல்
போற்றி வளர்ப்பீர் ஒற்றுமையே-நடந்து
    போனதைப் பேசல் வேற்றுமையே
சாற்றிட வேண்டுமா அதைமேலும்-வீண்
     சண்டைகள் தானே தினமூளும்
தோற்றவர் வென்றவர் வேண்டாவே-இதில்
    தோளொடு தோளென பூண்டாவே

 போதுமா? போட்டால்  தீர்மானம்-அறப்
     போரெனில் காக்க நம்மானம்
 மோதலே நம்மிடை எழுமாயின்-அதன்
     மேன்மை கெடவும் பழுதாமே
 ஏதுவாய் ஆகும் தமிழினமே-உலகம்
      எள்ளி நகைக்க வரும்தினமே
 ஆதியும அந்தமும் ஆயாமல்-கூடி
      ஆவன செய்வோம் ஓயாமல்


ஆறினால் கஞ்சியும் பழங்கஞ்சி-என
     ஆகும் நிலைக்கு நாமஞ்சி
வீரியம் கொண்டு எழவேண்டும்-ஈழம்
     விடுதலை உடனே பெறவேண்டும்
காரியம் முடியும் வரைநாமே-தினம்
     கண்துயிலும் நிலையை மறப்போமே
கூறினேன் மனதில் தோன்றியதை-கரம்
    குவித்து வேண்டினேன் செய்யுமிதை

              புலவர் சா இராமாநுசம்

1 comment:

  1. ஐயா எப்படி நலமாக இருக்கிறீர்களா
    உங்கள் வலைப்பூவை இணையப்பக்கத்தில் பார்க்கமுடிந்தது
    சிறப்பான கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்

    உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய முறை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை அதனால்தான் இப்படி தொடர்புகொள்ளவேண்டியதாயிற்று
    சரி மடலின் நோக்கத்திற்கு வருகிறேன்

    நானும் வலைப்பூ ஒன்றை எழுதிவருகிறேன்
    முற்றுமுழுதும் கவிதையால் வார்த்திருக்கும் வலைப்பூ அது
    நீங்கள் அதைப்பார்க்க வேண்டும் விமர்சனம் கூறவேண்டும்
    எனக்கும் ஓர் தூண்டுகோலாக இருக்குமே
    நன்றி
    உங்கள் பதிலின் எதிர்பார்ப்புடன்

    www.masteralamohamed.blogspot.com
    sirajmohamed21@gmail.com

    ReplyDelete