Monday, May 30, 2011

கடிகாரம்...

சுற்றும் உலகம் தன்னோடு-முள்
சுற்றி வருமே என்னோடு
சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை

புலவர் சா இராமாநுசம்

2 comments :

  1. அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
    அழகாய் அமைத்துளார் மற்றபடி


    காலத்தின் கடமையை
    உணர்த்த பயன் படும்
    கடிகாரத்தின்
    சாரம் சொன்ன கவிதை
    அற்புதம் ஐயா

    ReplyDelete
  2. சொல்லாமல் நகரும் காலத்தையும், மனிதன் தன் அறிவால் தடம் பதித்துச் செல்லவைத்ததன் அருமையினை உங்களின் கவிதையும் சொல்லிடத் தவறவில்லை. புதுமை நோக்கும், அதை புனைந்த விதமும் நன்று ஐயா. குழந்தைகள் பாடத்தில் கூட சேர்க்கவல்லது. தொடர்ந்து எழுதி எங்களுக்கென பல படைப்புக்களைப் பாடிவைத்து பெருமை சேருங்கள் நம் தமிழுக்கு. மிக்க வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும்!!

    பேரன்புடன்..

    வித்யாசாகர்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...