ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா. இராமாநுசம் அவர்களே, இரண்டு கவிதைகளையும் படித்தேன். முள்ளிவாய்க்காலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். ராஜபக்க்ஷேக்கள் ஒருநாள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ReplyDeleteநன்றி.....
ReplyDelete